Haindava Thiruvalam | ஹைந்தவ திருவலம் | ஸ்ரீவித்யா உபாசக தர்மங்கள்!
by Thiruvalam Sivanஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி துணை
|| ஓம் ஹ்ரீம் லலிதாம்பிகாயை நம: ||
|| க ஏ ஈ ல ஹ்ரீம்; ஹ ஸ க ஹ ல ஹ்ரீம்; ஸ க ல ஹ்ரீம் ||
* * *
வலைப்பூ அன்பர்களுக்கு,
”ஸ்ரீவித்யா உபாசக தர்மங்கள்”
1. ஸத்குருவிற்கு பணிவிடை செய்தல் வேண்டும். அதில் லவலேசமும் லஜ்ஜை கூடாது.
2. குரு சொன்னதை செய்ய வேண்டும். குருவின் வாக்கில் இது நல்லது இது கெட்டது என்று விசாரிக்ககூடாது.
3. தன் குரு பரம்பரையை கூடுமானவரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
4. குருவை தரிசித்த உடனேயே அவசியம் நமஸ்கரிக்க வேண்டும்.
5. தன் குருவைப்போலவே குருவின் புத்திரர்கள் பத்னி தீக்ஷா ஜ்யேஷ்டர்களிடத்திலும் நடந்து கொள்ள வேண்டும்.
6. தன் குருவை ஸாதாணமானவராய்ப் பார்க்காமல் பரதேவதா ரூபமாகப் பார்க்க வேண்டும்.
7. தன் குருவை தினமுமோ அல்லது வாரம் ஒரு முறையோ தரிசிக்க வெண்டும்.முடியாத போனாலும் வெளியூரில் இருந்தாலும் அவர் வசிக்கும் திசைநோக்கி நமஸ்கரிக்க வேண்டும்.
8. குருவும் பரமகுருவும் சேர்ந்து வந்தால் முதலில் பரமகுருவை வணங்கவேண்டும். பரமகுருவின் உத்தரவுடன்தான் குருவை வணங்கவேண்டும்.
9. தன் குரு ஜீவதசையில் தான் (சீடன்) மற்றவருக்கு மந்த்ர உபதேசமோ தீக்ஷையோ செய்தல் கூடாது.
10. சரீரம் தனம் ப்ராணன் குருவிற்காகவே காப்பாற்ற வேண்டும். சர்வக்ஞனான ஒரே குருவைத்தான் உபாஸிக்க வெண்டும்.
11. குருபர்வாக்கள் பஞ்சபர்வாக்கள் இவற்றில் அவசியம் பூஜை ஆராதனை செய்தல் வெண்டும்.
(குருபர்வா - ஸ்வகுரு பரமகுரு பரமேஷ்டிகுரு இவர்களின் ஜன்ம தினம் - வ்யாப்தி தினங்கள்
பஞ்சபர்வா - பௌர்ணமி கிருஷ்ண அஷ்டமி கிருஷ்ண சதுர்தசி அமாவாஸ்யை மாஸசங்க்ரமணம்.)
12. குருவாக்யம் சாஸ்த்ரம் இவற்றில் சிறிதுகூட சந்தேகம் வரக்கூடாது. சாஸ்த்ரத்தில் சந்தேகம் வருமானால் குருவாக்யமே சாஸ்த்ரமாம்.
13. உபாஸகன் பிற மத உபாஸகனை ஒருகாலும் தூஷிக்கக்கூடாது.
14. தன்னால் உபாஸிக்கப்படும் தேவதையைத் தவிர மற்றொன்று பெரியது என்று நினைக்கக்கூடாது.
15. எப்பொதும் தான் உபாஸிக்கும் தேவதையின் மந்த்ரத்தை நிதானமாய் ஜபம் செய்துகொண்டே இருக்கவேண்டும்.
16. நித்ய கர்மாக்களை செய்த பின்பே ஸ்ரீவித்யா மந்த்ரஜபங்கள் பூஜைகள் இவற்றை செய்யவெண்டும்.
17. ஸ்ரீவித்யா ஸம்பந்தமான ஷட்பாராயணங்களையும் ஜபம்செய்து அனுஷ்டானத்தில் வைத்துவரவேண்டும்.
18. நல்ல சிஷ்யனிடத்தில்தான் (உத்தம சிஷ்யன்) மிகவும் ரஹஸ்யமானவற்றைக் கூற வேண்டும்.
19. எப்பொதும் காமம் குரோதம் லோபம் மோகம் மதம் மாத்சர்யம் இவற்றை தள்ளவேண்டும்.
20. விதிக்காத தர்மம், திருடல் பஹுஜன விரோதம் ஸ்த்ரீகளை துவேஷிப்பவன் ஸ்திரீகளால் த்வேஷிக்கப்படுபவன் இவற்றை கைவிட வேண்டும்.
21. பலனை இச்சிக்காமல் கர்மாக்களை செய்யவேண்டும்.
22. உபாஸனைக்கு விக்னம் செய்பவர்களை சிக்ஷிக்கவேண்டும். தன்னை ஆஸ்ரயித்தவர்களை அனுக்ரஹிக்க வேண்டும்.
23. எல்லாவற்றிலும் ப்ரமாண வசனங்களை காட்டித்தான் நடந்து கொள்ளவேண்டும்.
24. அனுபவம் வாய்ந்த பெரியோர்களிடத்தில் அசட்டையாக இருத்தல் கூடாது.
25. எல்லாவற்றிற்கும் ஒரு தீர்மானம் வேண்டும். உண்மையே பேசவேண்டும். பரதனத்தில் ஆசை வைக்ககூடாது.
26. ஆத்மஸ்துதி பரநிந்தை மனம் புண்படும்படியான வாக்கு கேலிபண்ணுதல் திக்கரம் செய்தல் கத்துதல் பயத்தை உண்டுபண்ணுதல் இவற்றை செய்யக்கூடாது.
27. ஸ்த்ரீகளை திட்டக்கூடாது. திட்டுபவர்களின் சேர்க்கையும் வைத்துக் கொள்ளக்கூடாது. எல்லா ஸ்த்ரீகளையும் தேவிரூபமாக பாவிக்க வேண்டும்.
28. வேதத்தில் விதித்ததான சில கர்மாக்களை வைதீகர்கள் எவ்வித பயம் இல்லாமல் அனுஷ்டானம் செய்கிறார்களோ அவ்விதமே உபாஸ்தியில் விதித்ததான சில கர்மாக்களை நிர்ப்பயமாக அனுஷ்டானம் செய்யவேண்டும்.
29. விஹிதமான த்ரவியங்கள் கிடைக்காவிட்டாலும் நித்யமான பூஜையை விடக்கூடாது. மேலும் தன்பலம் வ்யவஹாரம் தேசம் காலம் வயசு இவற்றை நன்கு தெரிந்து கொண்டு விஹிதமான த்ரவ்யங்களை ஸ்வீகரிக்க வேண்டும்.
30. முக்கியமாக தன் ஆத்மாவை ஸ்வச்சப்ரகாசனாகவே அனுஸந்தானம் செய்ய வேண்டும். எப்பொதும் சிவோஹம் பாவனையுடன் இருக்கவேண்டும்.
31. எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்துக்கொண்டு பரதேவதையை ஆராதனம் செய்வதன் மூலமாக பூர்ண ஞானரூபமான ப்ரஹ்மபாவத்தை இச்சிக்கவேண்டும்.
மிகவும் ஸாரமான தர்மங்கள்:
உபாசனையே ஹோமம் என்ற நிலை திடப்பட வேண்டும்.
1. இந்த்ரிய வ்ருத்திகளால் அறியக்கூடிய எல்லாமே ஹவிஸ்.
2. இந்த்ரியங்கள்தான் ஹோமம் செய்யும் ச்ருக்குகள்.
3. தன்னிடத்தில் சங்கோசத்தை அடைந்திருப்பவைகளாயும் ஸர்வக்ஞத்வம் ஸர்வகர்த்ருத்வம் முதலான பரசிவனின் சக்திகள்தான் ஜ்வாலைகள்.
4. தன் ஆத்மாவாகிற சிவம்தான் அக்னி.
5. ஹோமம் செய்பவன் தானேதான்.
6. இவ்விதம் அனுஸந்தானம் செய்வதின் பலன்
என்னவென்றால் நிர்குணமான ப்ரஹ்மத்தை அபரோக்ஷமாக அடைவதுதான். தன் உண்மையான
ஸ்வரூப லாபத்தை அடைவதைத் தவிர மற்றோன்றில்லை.
குருவழிபாடும் தர்மங்களும்
ருத்ரயாமளத்தில் பரமேச்வரன் கூறுகிறார்:-
பரமேச்வரி! ஸத்குருவினிடமிருந்து சரியான உபதேசம் பெறாமல் புத்தகங்களை படித்துவிட்டு யார் ஒருவன் ஜபத்தையும், தவத்தையும் செய்கிறானோ அவன் முட்டாள். அவனுக்கு பாபம் சம்பவிக்கிறது. அவனை தாயாரோ, தந்தையோ, ஸகோதரனோ யாரும் காப்பாற்றமாட்டார்கள். குரு மட்டுமே அவனுடைய பாவக்குவியல்களை ஒரே க்ஷணத்தில் அழித்துவிடுவார். பாவத்தை அழிக்க குருவைத்தவிர வேறு எவருக்கும் அதிகாரமில்லை. எனவே ஒருவன் மேலான ஸத்குருவை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த ஒரு அறநூலும் குருவின் வழிபாட்டைவிட வேறு எதையும் சிறப்பாக கூறவில்லை.
கணவன் தன் மனைவிக்கும், தகப்பனார் தன் பிள்ளைக்கும், ஸஹோதரன் ஸஹோதரனுக்கும் தீக்ஷை செய்யக்கூடாது. ஆனால் ஒரு கணவன் ஸித்தமந்த்ரத்தை மனைவிக்கு தன் சக்தி என்ற பாவத்தில் கொடுக்கலாம்.
குருதந்த்ரம் கூறுகிறது:-
குரு ஸந்தோஷப்பட்டால் சிவனும் ஸந்தோஷப்படுகிறார். எல்லா தேவதைகளும் ஸந்தோஷப்படுகிறார்கள். குரு மகிழவில்லையானால் திரிபுரஸுந்தரியும் மகிழ்ச்சி அடைவதில்லை. ஏ! தேவி! இந்த ஸம்ஸாரக் கடலைக்கடக்க குரு ஒருவரே வழிகாட்டி. பாதுகாப்பானவர். துன்பங்களை அழிப்பவர். மேலும் அவரே மோக்ஷதாதா. ஒரு ஸாதகன் தன் முன்பிறவியில் சேர்த்துக்கொண்ட அத்ருஷடம் (நல்வினை) காரணமாக இப்போது தியானம், குருவணக்கம், குருமந்த்ர ஜபம், வழிபாடு, த்ருப்தி, குருபாதபக்தி இவைகளைச் செய்கிறான். இதனால்தான் அவனுடைய மந்த்ரங்கள் பலிதமடைகின்றன. எனவேதான் மோக்ஷம் கிடைக்கிறது. சீடன் குருவின் வீட்டில் வசிப்பது மதிப்பு மிக்கது. அவன் குருவின் வீட்டை ஒரு புனித க்ஷேத்ரமாக நினைத்தானேயானால் அவன் மதிப்பு பலமடங்கு உயர்கிறது.
யோகினீ தந்த்ரம் கூறுகிறது:-
குருவின் வீடே கைலாசம். அதுவே சிந்தாணிக்ருஹம். அவர் வீட்டில் உள்ள மரங்கள் கற்பகவிருக்ஷம். கொடிகள் கற்பகக்கொடிகள். குருவின் வீட்டு ஆண் வேலைக்காரர்கள் பைரவர்களாகவும், பெண் வேலைக்காரர்கள் பைரவிகளாகவும் கருதப்படுகிறார்கள். ஒரு முமுக்ஷுவான ஸாதகன் (மோக்ஷயிச்சையுடையவன்) நிச்சயமாக மேற்கண்டவாறுதான் நினைப்பான். குருவை ப்ரதக்ஷிணம் செய்பவன் ஏழுதீவுகளுடன்கூட இந்த உலகத்தையே சுற்றியவனாகிறான்.தக ப்பனார், தாய்வழிப்பாட்டன், தம்பி, இவர்களிடம் தீக்ஷை செய்துகொள்ளக்கூடாது.
கணேசவிமர்சினி கூறுகிறது:-
தகப்பனார், யதி, காட்டில் வசிப்பவர் இவர்களிடம் தீக்ஷை செய்து கொள்ளக்கூடாது.
விச்வஸாரதந்த்ரம் கூறுகிறது:-
குருவின் வாயிலிருந்து வருவது எதுவாக இருந்தாலும் அது மந்த்ரமே!
குப்தஸாதனதந்த்ரம் கூறுகிறது:-
குருவின் பாதத்தைத்தவிர ஒரு ஸாதகனுக்கு வேறு யாகங்களும், க்ஷேத்ராடனமும் உண்டா? வழிபாட்டு தலங்கள்தான் உண்டா? மூன்று உலகங்களும் ஏன் ப்ரபஞ்சமே குருவின் பாதகமலங்கள் தான். அண்ட சராசரங்களில் உள்ள அத்தனை தேவதைகளும் முத்தேவர்கள் உள்பட குருவின் சரீரத்திலேயே உள்ளனர். குருவிற்கு மேற்பட்ட சாஸ்த்ரங்கள், மந்த்ரங்கள், தலங்கள் இல்லை. மதவழிபாடுகளும் இல்லை. குரு வழிபாடே ஒருவனை ஸித்தபுருஷனாக ஆக்குகிறது.
***