Wednesday, May 1, 2019

மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில்

இதுவரை யாரும் காணத அம்மன் திறக்காத கருவறை கதவு ஒரு அமானுஷ்ய கோவில் தேவதானப்பட்டி மூங்கிலனை காமாட்சி அம்மன் கோவில்...

சிறப்புகள் ...


கோயிலில் அடைத்த கதவிற்கு முன்பாகவே பூசை செய்யப்படுகிறது.

கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் சிறப்பான ஒன்றாக உள்ளது.

அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை.
அன்ன நைவேத்தியம் செய்யப்படுவதில்லை.

கோயிலில் நெய்விளக்கு தீபம் மட்டுமே ஏற்றப்படுகிறது.
கோயிலில் விளக்குக்காகப் பக்தர்களிடம் காணிக்கையாகப் பெறப்படும் நெய் இங்குள்ள மண்பானைகளில் ஊற்றி வைக்கப்படுகின்றன. இந்த நெய்யிற்கு எறும்பு, ஈ, வண்டு என்று எதுவும் வருவதுமில்லை, மொய்ப்பதும் இல்லை.

திருவிழாக் காலத்தில் கோயிலில் அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்படும் நெய் சேகரிப்புக்காக சுமார் ஐம்பது மண்பானைகள் வைக்கப்படுகின்றன. இவையனைத்தும் எட்டு நாட்கள் திருவிழாவில் நிரம்பி விடுகின்றன.

தேவதானப்பட்டியைச் சுற்றிலுமுள்ள சில கோயில்களுக்கு இங்கிருந்து நெய் மற்றும் நைவேத்தியப் பொருட்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகின்றன.

வருடத்திற்கு ஒருமுறை கோயிலின் குச்சு வீடு கலசத்திற்குக் கூரை வேயப்படும் போது ராஜகம்பளம் சாதியினர் தங்கள் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டுதான் காமாட்சிப் புல்லால் கூரை வேய்கின்றனர்.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் போன்றே இங்கும் பூசை மண்டபத்தின் முன்பு கௌளி சின்னம் (பல்லியின் சின்னம்) பொறிக்கப்பட்டுள்ளது. இங்கும் கௌளி குறி கேட்டல் முக்கியமான ஒன்றாக உள்ளது.

ஐம்பத்து ஒன்று அட்சரங்களை, ஐம்பத்து ஒன்று தெய்வங்களை உள்ளடக்கிய ஐம்பது ஒன்று பீடங்களைக் கொண்டதாகும். 

உருவ வழிபாடு இல்லாமல் ஒளி வழிபாடு கொண்ட திருக்கோவில் நம் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள திருவிளக்கில் ஐந்து சுடர்கள் திருவுருவில் பஞ்சமூர்த்தி ரூபமாக இறைவன் நமக்கு அருள் பாலிக்கின்றான். 

மூலஸ்தானத்தில் இரண்டு பீடங்கள் அன்னை காமாட்சியும் அப்பன் ஏகம்பநாதணும் ஈஸ்வரன் ஈஸ்வரியாக அருள் கருணை புரிகின்றார்கள். 

உலகில் உள்ள ஹிந்துக் கோவில்கள் அனைத்திலும் இராஜகோபுரம் உள்ள தலைவாசல் கோவில் மூலஸ்தானத்தை நோக்கியே இருக்கும். முன் வாசலில் இருந்து பார்த்தால் மூலவர் திருவுருவம் நம் கண்ணில் படும். ஆனால் நம் கோவிலில் தலைவாசலில் இருந்து பார்த்தால் மூலஸ்தானம் தெரியாது..

அம்மன் ஒரு மரப்பெட்டியில் காமாட்சி மந்திர ரூபமாக உள்ளாள் என்றும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு தவ முனிவர் கொடைக்கானல் மலை மீது உள்ள தலையாறு நீர்வீழ்ச்சிக்கு பக்கத்தில் உள்ள "கரியமால்" என்ற வனப்பகுதியில் "அம்மா மச்சு" என்று இன்று அழைக்கப்படும் பகுதியில் என்னை மந்திரரூபமாக அமைத்து வழிபட்டு வந்தார். தான் இறைநிலை அடையும் காலம் வருவதை தன் தவ வலிமையால் உணர்ந்து மூங்கில் கூடை ஒன்றில் மந்திர ரூபமான நான் உள்ள சக்கரத்தை வைத்து மந்திரத்தால் அதை காப்பிடு வைத்தார் . 

அதை "முத்துராங்கப்பெட்டி " என்று அழைத்தார் .அந்த முத்துராங்கப்பெட்டி பல நூறு ஆண்டுகளுக்குப்பின் இன்று பெருமழையின் காரணமாக ஆற்றில் அடித்து வரப்பட்டது. என்னை வைத்து உன்னால் பாதுக்காக்க முடியாது. என் முறைகளை கடைப்பிடிக்க முடியாது என்னை விட்டுவிடு " என அன்னை காமாட்சி அசிரிரியாக ஓலித்தால் தேவதானப்பட்டி ஜமீன் குடும்பத்தை சார்ந்தவர்கள் அம்மா உன் முறைப்படி நானும் உன்னை வைத்து நானும் எனது வம்சத்தினரும் பூஜை செய்வோம் . முறை பிசகமாட்டோம் "என வாக்குறுதி கொடுத்து அன்னையின் சம்மதத்துடன் முத்தாரங்கப் பெட்டியை எடுத்து வந்து அன்னை காமாட்சிக்கு மஞ்சள் ஆற்றின் கரையில் ஆலயம் அமைத்தார் .

தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சள் ஆற்றின் கரையில் அன்னை காமாட்சியின் அருள்வாக்கின்படி நாணல் புல் கொண்டு கூறை வேய்ந்தது அந்த குச்சிலுக்குள் அன்னை வாசம் செய்யும் முத்தாரங்கப் பெட்டியினை வைத்து அதன்முன் திருவிளக்கு ஏற்றி அன்னையை வணங்கி வந்தார்.

கோவில் அருகில் யாரும் வசிப்பதில்லை கருவறை கதவுகள் திறக்கபடுவதில்லை ... 

அருகில் உள்ள மஞ்சள் ஆறு ஒன்று ஓடுகிறது இதில் தான் மூங்கில் தட்டில் அந்த பெட்டி அடித்து வரப்பட்டது ..

அருகில் ஒரு மருத மரம் ஒன்று உள்ளது 1000 வருடம் பழமையான மரம் மிகவும் சக்தி கொண்டது நிறைய மூங்கில் மரங்கள் உள்ளன 

பல அதிசயங்கள் கொண்ட திருக்கோவில் பல சித்தர்கள் சூட்சும தரிசனம் செய்ய இங்கு வருவதாக ஐதீகம் .

பல விஷயங்கள் இங்கு புரியாத புதிராகவே உள்ளது...

பக்தர்கள் நெய் பானைகளை இங்கு ஸ்வாமிக்கு விளக்கேற்றும் விதமாக இங்கு கொண்டுவந்து வைக்கின்றனர் ஒரு ஈ, எறும்பு அந்த பானைகளை மொய்ப்பதில்லை ...

இங்கு தேங்காய் மற்றும் வாழை பழம் நிவேத்தியம் கிடையாது .. கோவிலுக்கு வெளியில் அன்னதானம் உண்டு..

உரல் உலக்கை சத்தம் இங்கு கிடையாது அம்மன் தவம் செய்வதாக ஐதீகம் ...

தல வரலாறு

முன்பொரு காலத்தில், காஞ்சனா எனும் காட்டுப்பகுதியை, சூலபாணி எனும் அசுர மன்னன் வங்கிசபுரி எனும் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். இவன் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவம் புரிந்து பல அரிய வரங்களைப் பெற்றிருந்தான். அதில் தனக்குத் தன்னைக்காட்டிலும் அதிக வலிமையுடன், தான் பெற்ற அரிய சக்திகளுடன் ஆண் மகன் ஒருவன் பிறக்க வேண்டும் என்பதும் ஒன்று. இந்த தவத்தின் பலனால் அவனுக்கு வலிமையான ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு வச்சிரதந்தன் எனும் பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர் அவனை அப்பகுதியின் அரசனாக்கினான். அவனுக்கு மாங்குசானன் என்பவன் அமைச்சராகவும், துட்டபுத்தி என்பவன் தளபதியாகவும் இருந்தனர். இவர்களிருவரின் ஆலோசனைப்படி காட்டுப் பகுதியிலிருந்த தவசிரேஷ்டர்களையும், வேத விற்பன்னர்களையும் கொடுமைப்படுத்தத் தொடங்கினான். பிறப்பிலேயே பல்வேறு சக்திகளைப் பெற்றிருந்ததால் அவனை யாராலும் எதிர்க்க முடியவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் அவனுடைய தொல்லைகள் பற்றி பிரம்மனிடம் சென்று முறையிட்டனர். அவரும் வச்சிரதந்தனை அழிக்க தேவேந்திரனை அனுப்பி வைத்தார். தேவேந்திரன் வச்சிரதந்தனின் தளபதியான துட்டபுத்தியின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தனது படையையும் இழந்து போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டான். இப்படி ஓடிய தேவேந்திரன் வச்சிரதந்தனை பராசக்தியால்தான் அழிக்க முடியும் என்று கருதி பிற தேவர்களுடன் பராசக்தி காமாட்சியம்மனாக எழுந்தருளியுள்ள காஞ்சிபுரம் சென்று அன்னையிடம் வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற காமாட்சியம்மன் அவனை அழிக்கப் புறப்பட்டார். வங்கிசபுரி வரும் வழியில் பன்றிமலை என்ற வராகமலையில் இறங்கி துர்க்கையை வச்சிரதந்தனுடன் போரிட அனுப்பி வைத்தார்.

துர்க்கை அங்கிருந்து புறப்பட்டு வங்கிசபுரி வந்து வச்சிரதந்தனுடன் போர் புரிந்தார். அவனுடைய தலையைத் துண்டித்தார். மீண்டெழுந்து சிங்கத்தலையுடன் நின்றான். அதையும் துண்டித்தார். பின்னர் புலி, கரடி, காட்டெருமை என ஒவ்வொரு தலையுடன் தோன்ற அனைத்தையும் துண்டித்தார் துர்க்கை. இவனை ஒழிக்க காமாட்சியம்மனாலேயே முடியும் என்ற நோக்குடன் துர்க்கை அங்கிருந்து திரும்பினார்.

துர்க்கை தோல்வியுடன் திரும்பியது கண்டு காமாட்சியம்மன் கோபத்துடன் துர்க்காதேவியையும் அழைத்துக் கொண்டு அங்கிருந்து வங்கிசபுரி வந்தார். வச்சிரதந்தன் ஏவிய ஆயுதங்கள் காமாட்சியம்மனை மூன்றுமுறை வலம் வந்து அவனிடமே திரும்பிச் சென்றது. வச்சிரதந்தனும் அந்த அம்மனை வணங்கினான். பின்னர் அம்மனுடன் போரிடத் தொடங்கினான். துர்க்கையுடன் போரிட்டது போல் பல்வேறு தலைகளுக்கு மாறினான். காமாட்சியம்மன் துர்க்கையிடம் வச்சிரதந்தன் தலை துண்டிக்கப்பட்டு தரையில் விழுந்தவுடன் அதைக் காலால் நசுக்கி அழித்து விடும்படி கூறி வச்சிரதந்தனின் தலையைத் துண்டித்தார். துர்க்கையும் அந்தத் தலையைக் காலால் நசுக்கி அழித்தார். அசுரன் மறுதலை எடுக்க முடியாமல் அழிந்தான். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

அசுரனது தலையை மிதித்த இடம் தலையாறு எனவும், மூளை சிதறிப் போய் விழுந்த இடம் மூளையாறு எனவும், குலைகாய் ஈரல் விழுந்த இடம் குலையூத்து எனவும், உடல் குறுக்காக விழுந்த இடம் குறுக்குமலை எனவும் பெயர் பெற்றன. இன்றும் இந்தப் பகுதியில் இந்தப் பெயர்கள் வழக்கத்திலுள்ளன.

வங்கிசபுரிக்கு அருகில் வேகவதி என்ற ஆறு ஓடிக் கொண்டிருந்தது. இந்த ஆறு மாணிக்கமலைத் தொடரிலிருக்கும் தலையாறு எனுமிடத்தில் மூங்கில் காடுகளுக்கிடையே பாய்கிறது. அசுரனைக் கொன்ற அம்மன் யௌவன வடிவம் கொண்டு இந்நதி அருகில் தவமிருந்தாள். அசுரனைக் கொன்ற பாவம் அம்மனுக்கு நீங்குவதற்காக சப்த கன்னியர்கள், தெய்வப் பெண்கள், துர்க்கை அனைவரும் சேர்ந்து ஆயிரத்தெட்டு தங்கக் குடங்களில் நீரெடுத்து வாசனைத் திரவியங்களுடன் மஞ்சளும் கலந்து அபிசேகம் செய்தனர். கன்னித் தெய்வமாய் பொலிவுறும் காமாட்சியம்மனுக்கு அபிசேகம் செய்த மஞ்சள் நீர் ஆற்றில் கலந்ததால் வேகவதி ஆறாக இருந்த ஆறு மஞ்சளாறு எனப் பெயர் மாற்றமடைந்தது. அம்மன் தலையாற்றின் மூங்கில் காடுகளில் தவமிருந்த இடத்தில் சிறிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இது “அம்மா மச்சு” என்று அழைக்கப்படுகிறது.

பெயர்க் காரணம்

அசுரன் ஆண்ட வங்கிசபுரிக்கு தலேச்சுரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இது தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாக அளிக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று அழைக்கப்பெற்றது. பின்னர் இந்தப் பெயர் மருவி “தேவதானம்” என்று ஆனது. தற்போது இது தேவதானப்பட்டி என்று ஆகி விட்டது. இந்த தெய்வதானப்பதி நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் ராஜகம்பள நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவரின் தலைமையிலான பாளையத்தின் ஆட்சியாக (ஜமீன்தார் ஆட்சி) இருந்து வந்தது. இந்த ஜமீனைச் சேர்ந்த மாடுகளை ஒருவன் மேய்க்கக் கொண்டு செல்வான். அவன் மேய்க்கக் கொண்டு செல்லும் மாடுகளில் ஒன்றான ஈனாத (குட்டி போடாத) பசு ஒன்று தினமும் அந்தக் கூட்டத்திலிருந்து பிரிந்து சென்று மாலையில்தான் திரும்ப வரும். அந்த ஒரு பசு மட்டும் எங்கே செல்கிறது? எதற்குச் செல்கிறது? என்று அறிய ஆவல் கொண்ட அவன் ஒருநாள் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்து சென்றான்.

அங்கு மூங்கில் புதர் ஒன்றில் யௌவன வடிவமான தேவ அம்சம் பொருந்திய பெண் அப்பசுவின் பால் அருந்துவது கண்டான். அவன் கண்டது சாதாராணப் பெண் அல்ல. அது காமாட்சியம்மன். ஒளிப்பிழம்பாய் விளங்கும் அன்னையை மாடு மேய்ப்பவன் பார்த்தவுடன் அவன் கண்கள் குருடாகிப் போய்விட்டன. அவன் ஜமீன்தாரரிடம் சென்று நடந்ததைக் கூறினான். இது தெய்வக் குற்றமாக இருக்கும் என்று கருதிய ஜமீன்தாரர் பூசைகள் செய்தார். அப்போது அம்மன் அசரீரியாக, “இந்தப் பகுதியில் வச்சிரதந்தன் என்ற அசுரனை அழித்து அமைதிக்காக தவமிருக்கும் என்னைக் கண்ட மாடு மேய்ப்பவன் என்னுடைய ஒளி தாங்காமல் அவன் கண்களை இழந்தான். இன்னும் ஒரு வாரத்தில் இந்த ஆற்றில் பெருமழை பெய்து வெள்ளம் வரும். அந்த வெள்ளத்தின் மீது மிதந்து வரும் மூங்கில் பெட்டியில் நான் அமர்ந்து வருவேன். ஒரு இடத்தில் மூங்கில் புதர் கொண்டு அணையிட்டு பெட்டியைத் தடுத்து நிறுத்தி, அந்தப் பெட்டியை எடுத்து வழிபட்டால் குருடான உன் மாடு மேய்ப்பவனுக்குக் கண்கள் தெரியும். கன்னித் தெய்வமான என்னருகில் இல்லறத்திலிருப்பவர்கள் குடியிருக்கக் கூடாது. நெய்விளக்கு தவிர வேறு விளக்குகளை ஏற்றக் கூடாது. தேங்காயும் பழமும் நைவேத்தியம் செய்தால் போதும். அன்ன நைவேத்தியம் கூடாது” என்றும் கூறியது.

அம்மனின் வாக்குப்படி மழை பெய்து ஆற்றில் வெள்ளம் வந்தது. ஜமீன்தாரரும், அந்த ஊர் மக்களும் மஞ்சளாற்றின் கரையில் காத்து இருந்தனர். ஆற்றில் மூங்கில் பெட்டி ஒன்று மிதந்து வந்தது. பெட்டியைக் கண்டதும் அவர்கள் மூங்கில் புதர் அணையிட்டு அந்தப் பெட்டியை நிறுத்தினர். கண்கள் குருடான மாடு மேய்ப்பவன் அந்தப் பெட்டியை எடுத்தான். அவன் அந்தப் பெட்டியைத் தொட்டவுடன் அவனுக்கு கண்கள் தெரியத் தொடங்கின. காக்கும் தெய்வம் காமாட்சியம்மனின் சக்தியை நேரில் கண்ட மக்கள் பக்தியுடன் வணங்கத் தொடங்கினர். தேங்காய், பழம், சூடம், பத்தி வைத்து அவசர அவசரமாகப் பூசை செய்தார்கள். தேங்காய் உடைக்காமல், வாழைப்பழம் உரிக்காமல் பூசை செய்த பின்னர்தான் உணர்ந்தார்கள். குட்டி போடாத காரம்பசுவின் பாலருந்திய அம்மன் உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமும்தான் விரும்புகிறார் என்றும் தெளிவு கொண்டனர். அன்றிலிருந்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை. பழம் உரிக்கப்படுவதில்லை. பூசை செய்த பின்னர்தான் தேங்காய் உடைக்கப்படும். இது வேறு எந்த இந்து சமயக் கோயில்களிலும் இல்லாத ஒன்று. இக்கோயிலில் அன்ன நைவேத்தியமும் செய்யப்படுவதில்லை.

கோயில் கதவிற்குப் பூசை

மூங்கில் அணையிட்டு நிறுத்தியதால் இந்த அம்மன் மூங்கிலணைக் காமாட்சி என்று அழைக்கப்படுகிறார். அம்மனின் அருள் வாக்குப்படி பெட்டி எடுத்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. காமாட்சிப்புல்லால் வேயப்பட்ட குச்சுவீட்டுக்குள் (குடில்) அம்மன் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. கோயில் பூசை செய்யும் பொறுப்பு மலைமேல் குடியிருக்கும் மன்னாடியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களும் பூசைப் பணிகளைச் செய்து வந்தனர். இந்நிலையில் மன்னாடியருக்கும், ஜமீந்தாரருக்கும் அவர்களது நிலங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டில் கோபம் கொண்ட மன்னாடியார் கோயில் கதவைப் பூட்டியதுடன் “நான் அடைத்த கதவு என்றும் திறக்கக் கூடாது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். அன்றிலிருந்து இன்று வரை பூட்டியகதவு திறக்கப்படுவதில்லை. மேலும் அடைத்த கதவிற்கு முன்பாகத்தான் பூசை செய்யப்படுகிறது. தற்போது அந்த அடைத்த கதவின் முன்பாக நாக பீடம் அமைக்கப்பட்டு காமாட்சியம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையிலிருந்தபடி கோயிலின் குச்சுவீடு கலசம் (கர்ப்பகிருக கலசம்) தரிசனம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

காமக்காள் திவசம்

பூசாரி நாயக்கர் பரம்பரையில் வந்த கடைசி ஜமீந்தார் மனைவி காமக்காள் அன்பவர் தனது ஒரே மகனான பொம்முலிங்கசாமி என்ற மகனுடன் கோயிலுக்குள் இருக்கும் காமக்காள் அரண்மனை எனும் கட்டிடத்தில் வசித்து வந்தார். காமக்காள் தன் பக்தியின் வலிமையால் அம்மனுடன் நேரடியாகப் பேசும் பேறு பெற்றாள். இரவில் தன் தாயார் தனியாகச் சென்றி வருவதில் சந்தேகமடைந்த மகம் தாயைக் கோபித்துக் கொண்டார். அவண் அம்மா உண்மையைக் கூறிய நிலையிலும் நம்பாமல் தானும் அம்மனைக் காண வேண்டுமென்று பிடிவாதம் செய்தான். அன்றிரவு காமக்காள் மகனை அழைத்துக் கொண்டு சென்றார். காமாட்சியம்மனை நேரில் கண்ட அவன் மண்டை வெடித்துச் சிதறி இறந்தான்.

தன் ஒரே மகன் தலை வெடித்து இறந்ததைக் கண்ட காமக்காள் அம்மனிடம், “ எனக்கு இருந்த ஒரு மகனையும் எடுத்துக் கொண்டாயே. இனி நான் இறந்த பிறகு எனக்குச் செய்ய வேண்டிய திவசக் காரியங்களை (இறந்தவருக்குச் செய்யும் சில சடங்குகள்) யார் செய்வார்?” என வருந்திக் கேட்டள். உடனே அம்மன், “ வருத்தமடையாதே, நீ இறந்த பின் நாயக்கர் சமுதாயத்தவரைக் கொண்டே உனக்கு திவசமிடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாள். காமக்காள் தை மாதம் இரத சப்தமியில் மரணமடைந்தாள். அம்மனின் வாக்குப்படி ராஜகம்பளம் நாயக்கர்கள் திவசமிட்டனர். (காமக்காள் மற்றும் அவள் மகன் சமாதிகள் (கல்லறைகள்) இங்கிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன.

மகா சிவராத்திரி விழா

ஒவ்வொரு ஆண்டும் தை மாத இரத சப்தமியில் கோயிலில் காமக்காள் திவசம் கொடுக்கப்படுகிறது. திவசம் முடிந்த அன்றே கோயிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது. மகா சிவராத்திரியை முதல் தினமாகக் கொண்டு எட்டு நாட்கள் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருவிழா தேனி மாவட்டத்திலுள்ள கோயில்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இத்திருவிழாக் காலமான எட்டு நாட்களும் கோயிலுக்கு தனிப் பேருந்து வசதிகள் செய்யப்படுகின்றன.

ஆடிப்பள்ளயம் திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திங்களில் முதல் மூன்று நாட்கள் ஆடிப்பள்ளயத் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவில் ராஜகம்பளம் நாயக்கர் சமுதாயத்தின் “தேவராட்டம்” நிகழ்வு சிறப்பாக இருக்கும். இது தவிர சித்திரை வருடப் பிறப்பு, விஜயதசமி, கார்த்திகைத் திருநாள், தைப்பொங்கல் போன்ற பிற விழாக்காலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பிற நாட்களில் இந்தக் கோயிலில் தினசரி பூசைகள் நடைபெற்று வருகின்றன.

மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் என்பது தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டியில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்

பூணூல்_என்ன? Poonoool Wearing by Hindus

#பூணூல்_என்ன?

#பிராமணர்கள்_மட்டும்தான்_முப்பரிநூல்_அணியவேண்டுமா?

சமஸ்க்ருதத்தில் யக்ஞோபவீதம்.. அதாவது யக்ஞத்துக்கு உபவீதம்... நாம் செய்யக் கூடிய கர்மாக்களுக்கு யக்ஞம் என்று பெயர். யக்ஞங்களை செய்யும் முன் உபவீதமாக   அணிவதால் அது யக்ஞோபவீதம்.

பூணூலை அணியும் போது சொல்லும் மந்திரம்.

யக்ஞோபவீதம் பரமம் பவித்ரம்... ப்ரஜாபதே யத் ஸஹஜம் புரஸ்தாத்...
ஆயுஷ்யம்.. அக்ரியம் ப்ரதிமுக்ஞ ஸுப்ரம் யக்ஞோபவீதம் 
பலமஸ்து தேஜ:

“யக்ஞோபவீதம்.என்னும் பூணுல் மிகவும் பரிசுத்தமானது. ப்ரஜாபதியால் அருளப்பட்டது. வெண்மையான இதை அணிவதால் ஆயுள் அபிவிருத்தி ஆவதுடன், பலமும், ப்ரம்ம தேஜஸும் கிடைக்கிறது”

இவ்வாறு அணிபவர்கள் பிராமணர்கள் என்கிறது. பிராம்மணன்  என்பவன்  பிறப்பால்  பிரம்மணீயத்தை  ஏற்றுக் கொண்டவன்  அல்ல.  ‘பிரம்மம்’ என்பது  பரம்பொருளைக்  குறிக்கும்  சொல் . பரப்பிரம்மத்தை  குறிக்கும்  சொல்.  எவன் ஒருவன் பிரம்மத்தின்  தியானத்தில்  ஈடுபடுகிறானோ  அவனே  பிரம்மணீயத்தைத்  தழுவியவன். பிரம்மணீயம்  என்பது  ஜாதியல்ல.  அது  ஒரு  “நிலை“.  இறையானுபவத்தில்  ஈடுபடும் எவரும்  அந்த  நிலைக்கு  தங்களை  கொண்டு  செல்ல  பிரயத்தனப்படுபவர்கள்  ஆவார்கள்.

பூநூல் சாதி அடையாளமல்ல. மனிதன் மேம்பட்ட அறிவை குரு வழியாக பெற்று புதிய மனிதனாகிறான். அதன் காரணமாக ஏழு வயதுக்குள் உபநயனம் செய்து பூ நூல் அனுவித்து குருவிடம் கல்வி கற்க அனுப்பினர். கல்வி கற்குமுன்  அறியாத பிறவியாக இருந்தவன் பின் கல்வி அறிவு பெற்ற பிறவி ஆகிறான்.

இதை வேதம் இரு பிறப்பாளர் (த்விஜர்) என கூறும். இந்த சடங்கு காலப்போக்கில் சுருங்கி பிராமணர் எல்லோருக்கும் அடையாள கயிறாகி விட்டது. இந்த பூநூல் வருட வருடம் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படும் உபாகர்மா அன்று அவரவர் சம்பிரதாயப்படி தனது பூநூலை மாற்றி புதியதை அனைத்து கொள்ளலாம்.

பிராமணர்களின் தன்மைகளை பகவத் கீதை இப்படி சொல்கிறது..

"அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்."- 18.42

எந்த ஜாதியினரும் பூணுல் அணியலாமா ?

விஷ்ணுவை வழிபடுவது மனித வாழ்வின் இலட்சியம் ஆகும். இதற்கான முதல் படியாக இருப்பதே வர்ணாஸ்ரம தர்மமாகும். உண்மையான வர்ணாஸ்ரம தர்மம் பகவத் கீதையில் (4.13) கூறப்படுவது .

'ஒருவனது குணத்தினையும், செயல்களையும் அடிப்படையாக வைத்து வெவ்வேறு மனிதர்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.'  பகவத் கீதையில் (4.13)

அவர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வகை வர்ணம்( சமுதாய பிரிவு ) அறியப்படுகின்றனர்.  இந்த பிரிவு கடவுள் உணர்வில் முன்னேறுவதற்கு பயிற்ச்சி அளிப்பதே வேத கலாச்சாரத்தின் நோக்கமாகும்.
  
உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தில், ஒருவனின் வர்ணம் என்பது அவன் பெற்றுள்ள உண்மையான தன்மையை அடிப்படையாக கொண்டதே தவிர, பிறப்பு அல்லது கோத்திரத்தை வைத்து அல்ல. வேத,புராணங்களில் வரணத்தின் அடிப்படையில் வேத கல்வி அளிக்கப்படவில்லை !

இதற்கு ஸ்ரீ பாதராயணர் - சாந்தியோக்கிய உபநிஷத்தில் - 4:4 to 9 இல் சத்யகாமனின் வரலாறு மூலம் விளக்குகிறார்.

கெளதம முனிவர் ஒரு சூத்திரனான - சாத்யகாமனுக்கு  வேதம் சொல்லி கொடுப்பதாகவும். இதை படிக்க வர்ணங்கள் முக்கியமில்லை என கூறுகிறார் ! பின் அவனை சீடனாக ஏற்றுக்கொண்டு அவனுக்கு வேத அறிவை சொல்லிக்கொடுத்து பிராமணனாக ஆகுகிறார் !
  
வேத சாஸ்திரங்களில் இருந்து உதாரணம் :

1. ரிஷப தேவர் தனது 100 புதல்வர்களில் - முதல் 10 பேரை சத்திரியர்களாகவும், அடுத்த 9 பேரை பாகவத பேச்சாளர்களாகவும், மீதமுள்ள 81 புதல்வர்களை வேத வேள்விகள் செய்யும் அந்தணர்களாகவும் (பிராமணர்களாக) மாற்றினார் என்று ஸ்ரீமத் பாகவதம் ஐந்தாம் காண்டம் சொல்கிறது.

2. அதே போல், பிராமணராக இருந்த அஜாமிளன் தனது கெட்ட நடத்தையினால் சூத்திரனாக மாறினான். - பாகவதம் 5 காண்டம்.

3. சத்திரிய குடும்பத்திலிருந்து வந்த விசுவாமித்திரர் காலப்போக்கில் தகுதிகளை வளர்த்து கொண்டு பின்னர் பிராமணராக மாறினார்.

4. இராவணன் பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அவனது அசுரர் சுபாவதினால் அவனை எவரும் ஒருபோதும் பிராமணராக ஏற்கவில்லை.

5. ஜபல உபநிஷத்தில், ஒரு சிறுவன் வேசிக்கு பிறந்தவனாக இருந்த போதிலும், அவனிடம் பிராமண தகுதிகள் இருந்த காரணத்தினால், அவனை கௌதம முனிவர் பிராமணராக ஏற்று கொண்டார்.

இவ்வாறு, வேத சாஸ்திரத்தில் பல இடங்களில் குணம், மற்றும் தொழிலை அடிப்படையாக வைத்து வர்ணங்கள்  பிரிக்க பட்டது .

வேத காலத்தில் பிறப்பு என்பது ஒரு அடையாளமாக எடுத்து கொள்ளபட்டதே தவிர, அதுவே நியதியாக ஏற்கப்படவில்லை. பொதுவாக வேத காலத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்பவர் அக்குடும்பத்துக்குரிய குணத்துடன் இருப்பார் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால் கலியுகத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், முறையான தகுதியினால் ஒருவன் பிராமணராக ஆக  முடியும் என்று ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

மஹாபாரதத்திலிருந்து சில கூற்றுகள்..

மஹாபாரதம் வனபர்வம் பகுதி 311-ல், யுதிஷ்டிரர் யக்ஷனிடம் மேற்கொண்ட உரையாடலைக் காண்போம்.

யக்ஷன் யுதிஷ்டிரரிடம் வினவினார், "மன்னா, எத்தகைய பிறவி, நடத்தை, (வேத) படிப்பு அல்லது (சாஸ்திர) கல்வியினால் ஒரு மனிதன் பிராமணனாகிறான்?

யுதிஷ்டிரர் பதிலளித்தார், "யக்ஷனே, கேள்! பிறவியோ, படிப்போ, பிராமணத் தன்மைக்குக் காரணமில்லை. நடத்தையே பிராமணத் தன்மையாகும், இஃது எப்போதும் நன்கு பாதுகாக்கப்பட வேண்டும். நடத்தையைக் கெடாமல் பராமரித்தால். அவன் ஒருபோதும் கெடு நிலையை அடைவதில்லை. நான்கு வேதங்களைப் படித்தும், ஒருவன் இழிந்தவனாக இருந்தால், அவன் சூத்திரன். புலன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான்."
  
அதேபோல ஒருமுறை பீமன் நகுஷன் என்ற பாம்பிடம் அகப்பட்டு, அதன் உணவாக இருந்த நிலையில், பீமனை விடுவிக்கவேண்டி நகுஷனிடம் யுதிஷ்டிரர் வேண்டினார். தான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரபூர்வமான பதிலளித்தால் பீமனை விடுவிப்பதாக நகுஷன் கூறினான். அவ்வுரையாடலில்,

          ஒரு சூத்திரன் பிறப்பால் மட்டுமே சூத்திரன் அல்ல என்றும், அதேபோல ஒரு பிராமணனும் பிறப்பால் மட்டுமே பிராமணன் அல்ல என்றும், யாரிடம் பிராமணருக்குரிய குணங்கள் இருக்கின்றனவோ அவரே பிராமணர் என்று ஞானமுள்ளோர் கூறியிருப்பதாகவும், யுதிஷ்டிரர் தனது முன்னவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி நகுஷனிடம் பதிலளித்தார்.(வனபர்வம் பகுதி 83)

மேலும், மஹாபாரதத்தின் வனபர்வம் பகுதி 211-ல் தர்மவியாதன் என்ற வேடனை கௌசிகர் அணுகி நுட்பமான விஷயங்கள் குறித்து கேட்டறிந்தபோது, வேடன் பின்வருமாறு கூறலானான்:

  "ஒரு மனிதன் சூத்திர ஜாதியில் பிறந்திருக்கலாம், ஆனால் அவன் நற்குணங்களைக் கொண்டிருந்தால், வைசிய நிலையையும் சத்திரியருக்கு ஒப்பான நிலையையும் அடையலாம். மேலும், அவன் நேர்மையில் உறுதியாக இருந்தால், பிராமணராக ஆகலாம்."

மேலும், மனு சட்டத்திலும் ஒரு வசனம் ...

‘சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச’

அதாவது –  ‘சூத்திரன்  பிராமணனாகி  விடலாம்;  பிராமணனும்  சூத்திரனாகலாம்;  அதே  போல்,  க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களின்  மகன்களும்,  மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’.    அவர்கள்  வேதம்  ஓதும்  பிராமணர்கள் கூட ஆகலாம்  என்று சொல்கிறது.
  
சைவ சமயத்தில் சூத்திரரும் பூணூல் அணியலாம் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன.சிவாகம கருத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தருளிய ஸ்ரீமத் நிகமஞான சம்பந்த தேசிகர் என்றும் ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகரென்றும் அழைக்கப்படும் சைவ சித்தாந்த ஆச்சாரியானவர்,தமது நூலான "சைவ சமய நெறி"-ல் இவ்வாறு கூறியுள்ளார் :

தர்ப்பணத்தி லர்ச்சனையி லாகுதியி லுந்தரிக்க
விற்பயிலுஞ் சூத்திரரிந் நூல் 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 52

இல்லத்தில் ஒழுகின்ற சூத்திரர்,தர்ப்பண காலத்திலும் பூசாகாலத்திலும் அக்கினி காரிய காலத்திலும் இப்பூணூலைத் தரிக்கக் கடவர்

உம்மையால் தீக்ஷா காலமும் உற்சவகால முதலியனவுங் கொள்க.

இவரு ணயிட்டிகனெப் போதுந் தரிக்க
வவனியிலு மாசையறுத் தால் 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 53  

இச்சூத்திரருள் நயிட்டிகப் பிரம்மச்சாரியானவன் மண்ணாசை பொன்னாசை பெண்னாசை என்கின்ற மூவகை ஆசைகளையும் நீக்கியிருப்பானாகில் எக்காலத்தும் பூணூல் தரிக்கக் கடவன் 

ஆக, சூத்திரரும் பூணூல் அணியும் மரபு சைவத்தில் உண்டு என்று தெளிவாகியுள்ளது.

எனவே  ஸ்வபாவத்தால்  ஏற்படுகின்ற  தொழில்  ஒன்றானாலும்,  சிந்தையால்  ஒருவன்  எப்படி வாழ்கிறான்  என்பதன்  மூலமே  ஒருவன்  உயர்ந்தவன்  எனப்படுவதும்,  தாழ்ந்தவன்  என்ப்படுவதும்  ஆகும் . ஜாதி  வேறுபாடுகளையும் , அவற்றின்  அடிப்படையில்  உயர்வு,  தாழ்வுகளையும்  வேதபுராணங்களில்்  சொல்லவில்லை.

Wednesday, January 23, 2019

ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு

ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு.

யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். 
தேவர்களில் உயாந்தவர் ஹரி. 
யானைகளில் உயர்ந்தது ஐராவதம். 
குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. 
பசுக்களில் உயர்ந்தது காமதேனு. 
மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். 
பெண்களில் உயர்ந்தவர் சீதை. 

அது போல யந்திரங்களில் உயர்ந்தது ஸ்ரீ சக்ரம் எனப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு. 

விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. 
முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். 
ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். 
நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம்; 
இந்திரன் இருக்குமிடம் தேவலோகம். 
சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். 

அது போல அன்னை ஜகன்மாதா அம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீ புரம் எனக்கூறப்படும் ஸ்ரீ சக்ர பூர்ண மகாமேரு பீடம் என்னுமிடமாகும். 

அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும. ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு. ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். 

ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை. பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள். 

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும். 

ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.

சௌந்தர்யலஹரியின் இரண்டாவது பாடலில் ஆதிசங்கர பகவத்பாதாள் பேசும்போது ஸ்ரீ சக்தியின் திருப்பாதங்களில் இருந்து விழுகின்ற மண் துகள்களை வைத்து பிரம்மா பூலோஹம், புவர்லோஹம், ஸுவர்லோஹம், மஹர்லோஹம், ஜனலோஹம், தபலோஹம், ஸத்யலோஹம் எனும் மேல் லோகங்கள் ஏழையும், அதல, விதல, ஸுதல, ரஸாதல, தலாதல, மஹாதல, பாதாளம் எனும் கீழ்லோகங்கள் ஏழையும் ஸ்ருஷ்டித்தார் என்கிறார்.

ஸ்ரீ மகாதேவியின் பாததூளியால் ஆதிசேஷன் உருவெடுத்து பிரம்மா படைத்த பதினான்கு உலகையும் தன் சிரசினால் தாங்கிகொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ ருத்திரனோ தேவியின் பாததூளியை கையிலெடுத்து “த்ரியம்பக” மந்திரத்தினால் பஸ்ம பொடியாக்கி தன் சிரசு முதல் பாதம் வரை பூசிக்கொண்டார்.

பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.

தேவி சிவனை அன்பால் நோக்கியபோது வல்லபை, ஸித்தி லட்சுமியுடன் ஸ்ரீ கணபதி தோன்றினார். ஸ்ரீ கணபதியும், ஸ்ரீ முருகனும் ஸ்ரீ சக்கரத்தில் அன்னையிடம் பால் அருந்தும் குழந்தைகள் .

ஸ்ரீ சக்ரம் அமைந்திருக்கும் அறையின் வலப்புறம் மகாகாளியும், இடதுபுறம் மகா பைரவரும் துவார சக்திகளாக அன்னைக்கு காவல் புரிகின்றனர்.

நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.

குலதெய்வம் தெரியாதவர்களுக்கு ஸ்ரீசக்ர வழிபாடு ஒரு வரப்பிரசாதம். ஸ்ரீ சக்ரத்தை வழிபட்டால் குலதெய்வம் நிறைவடையும், ப்ரசன்னமாகும்.

ஸ்ரீ சக்கரத்திற்கு மேலான யந்திரமோ, ஸ்ரீ வித்யைக்கு மேலான மந்திரமோ, ஸ்ரீ லலிதாம்பிகைக்கு மேலான தேவதைகளோ இல்லை என்பது தனி சிறப்பு.