Thursday, September 13, 2018

*கடவுளை உணர்ந்தேன் :*

*கடவுளை உணர்ந்தேன் :*

எவர் எவரோ எழுதி வைத்த நூல்களை கற்றேன் ஆராய்ந்தேன், வேதங்களை கற்றேன், ஆராய்ந்தேன், ஆனால் கடவுளை உணர முடிய வில்லை. சிவன் விஷ்ணு, பிரம்மா, எனும் கடவுளர்களின் வரிசையில் எவர் பெயரை சொன்னாலும் அன்னியமாக பட்டது. பிறர் எழுதி வைத்த அனுபவ நூல்களையும் ஆராய்ந்ததில் உயிர் ஒன்றே கடவுள் என உணர்ந்தேன். ஆம் அது ஒன்றே எனது சொந்த பொருளாக பட்டது. அதை மட்டுமே என்னால் உணர முடிந்தது. கற்பனை கடவுளர்கள் எவரையும் என்னால் காண இயலவில்லை. தவத்தினால் உயிரை மட்டுமே உணரமுடிகிறது. உலகின் ஏக கடவுள் உயிர் மட்டுமே.

கன்று தன் தாய்ப்பசுவை அழைப்பது போல், நான் என் உயிர் கடவுளை அன்பு கூடி அழைக்கிறேன், உயிர் ஞான பால் அருந்தவே.

அவன் என்றும் அழியாத தன்மையுடன் நின்று அருள் வழங்குகிறான். தம் குற்றங்களைக் களைந்து, நற் குணங்களைப் பயின்று உயிரை நாடி இருப்பார்கள் அவனுடன் இரண்டற கலந்திருந்து பேரானந்தம் பெறலாம். அறியாமையால் அகத்து ஈசன் உன்னை உணராது, புறத்தே உன்னை வாழ்நாள் முழுக்க தேடி தேடி காலன் ஓலை வந்த பின்பு மாண்டு போன கோடா கோடி மாந்தர் போல் இனியும் எம் மாந்தர் குலம் அழியாது காத்திடுவாய் என்னுயிரே.

அகத்துளே சென்று, ஆதி நாத உயிர் கடவுள் நீதான் என்றுணர இன்னும் எத்தனை காலமுள்ளதோ?
மண்ணாகி விண்ணாகி மலையு மாகி
வயிரமுமாய் மாணிக்கந் தானே யாகிக்
கண்ணாகிக் கண்ணுக்கோர் மணியு மாகிக்
கலையாகிக் கலைஞானந் தானே யாகிப்
பெண்ணாகிப் பெண்ணுக்கோ ராணு மாகிப்
பிரளயத்துக் கப்பாலோ ரண்ட மாகி
எண்ணாகி யெண்ணுக்கோ ரெழுத்து மாகி
யெழுஞ்சுடரா யெம்மடிகள் நின்ற வாறே.

மண் ஆகியும், விண் ஆகியும், மலையாகியும் வயிரமாகியும், மாணிக்கமாகியும், கண்ணாகியும், கண்ணுக்குப் பொருத்தமான மணியாகியும், நூல் ஆகியும் நூலறிவாகியும் பெண் ஆகியும் பெண்ணுக்கு ஏற்ற ஒப்பற்ற ஆணாகியும், பிரளலயத்துக்கு அப்பால் உள்ள அண்டமாகிய சுத்த மாயாபுவனம் ஆகியும் எண்ணுதற்குப் பொருந்திய பொருள் ஆகியும் அவ்வெண்ணத்தை வெளிப்படுத்தும் ஒப்பற்ற எழுத்தாகியும் தோன்றி விளங்கும் ஒளியாகியும், எம்பெருமான் நின்றவாறு வியக்கத்தக்கதாகும்.

No comments:

Post a Comment