Friday, December 7, 2018

தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல்

அரூபமான ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி, அவற்றுக்காக விக்கிரக ஆராதனைகளை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு பிரத்தியேக அம்சம். இதனால் அந்நியர்கள் நம்மைப் பல — தெய்வக் கொள்கையினர் (poly-thesis) என்கிறார்கள். இப்படிச் சொல்வது சுத்தத் தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக எண்ணுவதாகாது. அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்கிரகம்தான் ஸ்வாமி என்று நினைத்து, விக்ரஹ ஆராதனை (ldolatry) செய்கிறார்கள்’ என்பதும் முழுப் பிசகு. விக்ரஹம் மட்டும்தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும் நினைக்க மாட்டான். எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனஸை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க வசதியாக இந்த விக்ரஹத்தில் இருப்பதாகத்தான் நினைத்து ஆராதிக்கிறான். எந்த மதமானாலும் சின்னங்கள் (Symbol) வைத்துப் பூஜிப்பதையோ, தியானிப்பதையோ பார்க்கிறோம். அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும் உருவ வழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிக்கூட நியாயமற்றதாகும்.

ஹிந்து மதஸ்தர்கள் ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை அநுசரிப்பதுதான் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை (exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை (open accepting outlook) நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மத மாற்றம் (Conversion) செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.

"கண்டகி நதி புராணம் "

தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது. 

அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள். 

இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை. 

ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான். 
வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான். 

உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.

அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள். 

உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.

இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.

திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது. 

இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார். 
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார். 

கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது. 

அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார். 

சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான்  சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.
"கண்டகி நதி புராணம் "

'ருத்திராட்சம்'

ருத்திராட்சம்! சிவபக்தர்கள், சிவனடியார்கள் தங்கள் கழுத்தில் பயபக்தியுடன் அணிந்திருக்கும் சிவச்சின்னம். இது, கடவுண்மணி, சிவமணி, தெய்வமணி, நாயகமணி என்றும் அழைக்கப்படுகிறது. ருத்திரன் என்பது சிவபெருமானையும், அட்சம் என்பது கண்களையும் குறிப்பதாகும் சிவனின் முக்கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் சொட்டுகளே 'ருத்திராட்சம்'. 

பகவானின் வலக்கண்ணிலிருந்து 12 மஞ்சள் நிற ருத்திராட்சங்களும், இடக்கண்ணிலிருந்து 16 வெண்ணிற ருத்திராட்சங்களும், நெற்றிக் கண்ணிலிருந்து 10 கருமை நிற ருத்திராட்சங்களும் தோன்றின. 

ருத்திராட்சத்தின் மேன்மையையும், அணிவதால் நாம் அடையும் நன்மைகளையும் பற்றி வேதவிற்பன்னர் சுந்தரேஷசர்மாவிடம் கேட்ட போது, அவர் கூறிய தகவல்களின் தொகுப்பு இது. 

ருத்திராட்சம் உருவான வரலாறு:

தாரகாஷன், வித்யுன்மாலி, கமராஷன் என்னும் மூன்று அசுரர்கள் சிவபெருமானை வேண்டி, கடுமையான தவம் புரிந்தனர். தவத்தில் மனம்குளிர்ந்த இறைவன் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பால் ஆன மூன்று கோபுரங்களைத் தந்தருளினார். இந்தக் கோபுரங்களின் மூலமாகப் பறந்து செல்லும் சக்தியும், பல்வேறு ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஆற்றலும் அசுரர்களுக்குக் கிட்டியது.

இதனால் அசுரர் மூவருக்கும் ஆணவம் தலைக்கேறியது. மூவுலகத்தையும் வென்று தேவர்களையும் துன்பப்படுத்தினர். அசுரர்களின் கொடுமைகளைப் பொறுக்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமானும் அசுரர்களை அழித்துக் காப்பாற்றுவதாக உறுதி அளித்தார்.

தேவர்களுக்குச் செய்துகொடுத்த சத்தியத்தைக் காப்பதற்காக, சிவபெருமான் தன்னால் வரம் அருளப்பட்ட அசுரர் மூவரையும் தன் நெற்றிக்கண்ணால் அழித்தார். 

அந்நேரத்தில் அவர் மனம் இளகி அவரது கண்ணிலிருந்து கண்ணீர் கொட்டியது. அந்தக் கண்ணீரே 'ருத்திராட்சம்' ஆனது.

யார் யார் ருத்திராட்சம் அணியலாம்?

ஆண், பெண் பேதமின்றி யாரும் அணியலாம். வயது வரம்பும் கிடையாது. ஆனால், ருத்திராட்சம் அணிந்தால் சில நடைமுறைகளை, பழக்கவழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். 



ருத்திராட்சம் அணியவேண்டிய காலங்கள்:

கடவுளுக்குப் பூஜை செய்யும்போது அணியலாம். பிறருக்கு கல்வி அளிக்கும்போது அணியலாம். புனித நதிகளில் குளிக்கும்போது, பிதுர் தர்ப்பணம் செய்யும்போது, வீட்டில் நடைபெறும் சுப நிகழ்வுகளின்போது அணியலாம். எந்தவொரு செயலையும் ருத்திராட்சம் அணிந்து செய்யும் போது நமக்கு இறைவனின் அனுகூலம் கிடைப்பதால்,  நிச்சயம் வெற்றி கிட்டும்.

ருத்திராட்சம் அணியும் முன்பாக பின்பற்றவேண்டிய நடைமுறை:

ஒருவார காலம் பசு நெய் அல்லது நல்லெண்ணெயில் ருத்திராட்சத்தை ஊறவைக்கவேண்டும்.

பின்னர் நீரால் சுத்தப்படுத்தி, ஈரம் காய்ந்த பின்னர் திருநீறில் ஒருநாள் முழுவதும் வைத்திருக்கவேண்டும்.

அடுத்ததாக, பச்சைப் பசும்பாலில் கழுவவேண்டும், பின்பு மீண்டும் நீரால் தூய்மை படுத்தவேண்டும்.

தூய்மையான ருத்திராட்சத்தை  பூஜை செய்து, மந்திரம் ஜபித்து அணியவேண்டும்.

ருத்திராட்சம் அணிவதால், உண்டாகும் பொதுவான நன்மைகள்:

புண்ணிய நதிகளில் நீராடிய நன்மை கிட்டும்.

தீய சக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.



மோட்சத்தை அருளும் சக்தியை வழங்கும்.

லட்சுமி கடாட்சம் கிட்டும்.

புத்திரப் பாக்கியம் உண்டாகும்.

ருத்திராட்சத்தைப் பார்ப்பது மகா புண்ணியம். தொட்டால் கோடி புண்ணியம். அணிந்துகொண்டால் பல கோடி புண்ணியமாகும்.

நம் உடல் பிணிகளைப் போக்கக் கூடியது.

108 ருத்திராட்சம் கொண்ட மாலையை அணிந்தால், 'அசுவமேத யாகம்' செய்த புண்ணியம் உண்டாகும். பாவங்களிலிருந்து விடுதலை கிட்டும்.

ஒன்று முதல் பதினான்கு முகங்கள் கொண்ட  ருத்திராட்சம் உண்டு. ருத்திராட்சங்களின் முகங்களைப் பொறுத்து நமக்கு கிடைக்கும் நன்மைகளும் மாறுபடும்.

பெரும்பாலும், இருமுகம், ஐந்துமுகம், 11 முகம், 14 முகமே சிவனடியார்களால் போற்றப்படுகிறது. சிவனடியார்களின் அறிவுரை மற்றும் ஆசீர்வாதத்துடன்ருத்திராட்சம் அணிவது சிறப்பு.

பிறப்பு, இறப்பு போன்ற தீட்டு நாள்களில் ருத்திராட்சம் அணியக் கூடாது.  



ருத்திராட்ச மரம் தல விருட்சமாக உள்ள ஆலயங்கள்:

திருவலஞ்சுழி
அச்சுதமங்கலம்
தாராசுரம்

எத்தனை பெரிய கோடீஸ்வரர்கள் ஆனாலும், இறுதியில் வருவது ஈஸ்வரனின் திருவடிகளுக்குத்தான். 'ருத்திராட்சம்' எப்போதும் நம்மை இறைவனுக்குஅருகிலிருப்பது போல் உணர வைக்கும்.

ருத்ராட்சை சிவனின் வடிவமாகவே கருதி பூஜைகள் செய்வர். பல முகங்களில் ருத்ராட்சங்கள் உள்ளன.

நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27 நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள் மாறுபடும். எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம்.

1. அஸ்வினி - ஒன்பது முகம்.

2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.

4. ரோஹிணி - இரண்டு முகம்.

5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.

6. திருவாதிரை - எட்டு முகம்.

7. புனர்பூசம் - ஐந்து முகம்.

8. பூசம் - ஏழு முகம்.

9. ஆயில்யம் - நான்கு முகம்.

10. மகம் - ஒன்பது முகம்.

11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.

12. உத்திரம் - பனிரெண்டு முகம்

13. ஹஸ்தம் - இரண்டு முகம்.

14. சித்திரை - மூன்று முகம்.

15. ஸ்வாதி - எட்டு முகம்.

16. விசாகம் - ஐந்து முகம்.

17. அனுஷம் - ஏழு முகம்.

18. கேட்டை - நான்கு முகம்.

19. மூலம் - ஒன்பது முகம்.

20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.

21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.

22. திருவோணம் - இரண்டு முகம்.

23. அவிட்டம் - மூன்று முகம்.

24. சதயம் - எட்டு முகம்.

25. பூரட்டாதி - ஐந்து முகம்.

26. உத்திரட்டாதி - ஏழு முகம்.

27. ரேவதி - நான்கு முகம்

அந்தந்த நட்சத்திரதாரர்கள் அவரவருக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்து பயன் பெறுங்கள்.

Contact no 9787270506

யோகம் வியோகம்


மஹாபெரியவா அருளுரை


தெய்வத்தின் குரல்

யோகம் என்றால் சுவாசத்தை அடக்கி அடக்கியே சிலை மாதிரி உட்கார்ந்திருப்பதுதான் என்று பொதுவாக நினைக்கிறார்கள். ‘யோகம்’ என்பதற்கு நேர் அர்த்தம் சேர்க்கை என்பது. பல வஸ்துக்களோடு நாம் வாழ்க்கையில் சேர வேண்டியதாகிறது. ஆனால் இந்தச் சேர்க்கை எதுவும் நிரந்தமாக இருக்கவில்லை. அதனால்தான் மனசு கிடந்து ஆடிக்கொண்டேயிருக்கிறது. இப்படியில்லாமல் முடிந்த முடிவான ஒரே வஸ்துவுடன் எந்தநாளும் சேர்ந்துவிட்டோம், அதற்கப்புறம் நாம் என்று ஒன்று, அதிலிருந்து பிரிந்து வரவே முடியாது என்று ஆக்கிக் கொண்டுவிட்டால், அதுதான் நிஜமான யோகம். நம் மனசுகளுக்கெல்லாம் மூலமாக இருக்கிற பரமாத்மாதான் அந்த ஒன்று. மனசை மூலத்தில் திருப்புவதற்காகவே யோகிகள் சுவாசத்தை அடக்குகிறார்கள்! ஏனென்றால் எண்ணம் உதிக்கிற வேர் எதுவோ, அதுவேதான் சுவாசத்தின் வேரும் ஆகும். எனவே சுவாசம் மூலத்தில் நின்றால் மனமும் அதன் மூலத்துக்குப் போய் அடங்கிவிடுகிறது.

யோகம் என்பதற்கு எதிர்ப்பதம் ‘வியோகம்’. விட்டுப் போவதை ‘வியோகம்’ என்கிறோம். உடம்பைவிட்டு ஒருவர் செத்துப் போய் விட்டால் ‘தேக வியோகம் ஆகிவிட்டார்’ என்று சொல்கிறோம் அல்லவா?

ஒரு தினுசான வியோகம் வந்துவிட்டால் அதுவே யோகம் ஆகிவிடும் என்று பகவான் கீதையில் சொல்கிறார். ஏதோ ஒன்றில் வியோகம் வந்தால் — அதாவது, எதுவோ ஒன்றை விட்டுவிட்டால் அதுவே யோகம் என்கிறார். அந்த ஒன்று என்ன? துக்கம் என்பதே. துக்கம் உன்னிடம் ஒட்டாமல் பிரித்துத் தள்ளிவிட்டால் அதுவே யோகம் என்கிறார். (தம் வித்யாத் து:க ஸம்யோக வியோகம் யோக ஸமஞிதம்.)

லோக ரீதியில் நாம் சொல்கிற ‘இன்பங்களும்’ கூட இந்தத் துக்கத்தைச் சேர்ந்தனவே. பரமாத்மாவைப் பிரிந்திருக்கிற எல்லா அநுபவமுமே துக்கம்தான்.

திருவாசகம் ஒரு தேன்

திருவாசகம் என்பது ஒரு தேனை போன்ற தன்மை பெற்றது. தேன் எந்த பொருளோடு சேருகிறதோ அதை தன்வயம் படுத்தி கொள்ளும். அது போன்று எவர் ஒருவர் திருவாசகம் பயில்கின்றாரோ அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை தன்வயம் படுத்தி கொள்வாரகள், அவர்களை எந்த ஒரு தீய வழிகளையும் நோக்கி செல்ல விடமாட்டார்கள்...

திருவாசகத்திற்கு உருகாதார் ஓரு வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது..

அனைத்தும் வேத.. ஆகம... மந்திர...அற்புத எழுத்துக்கள்.. வார்த்தைகள்... சொற்கள்.... பொருள் உணர்ந்து தெளிந்தால் பேராணந்தமாகும்.... சிவாயநம..

வேதம் நான்கினும் மெய்பொருளாகும் நாதன் நாமம் நமசிவாய... நம் அனைவரையும் ஆளட்டும்...

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே — எல்லை
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவாசகம் என்னும் தேன்..

ஓம் நமசிவாய.. திருச்சிற்றம்பலம்...

நலம் தரும் சிவபுராணம் நாளும் பாடிடும் மனமே சிவன் வருவார் அருள் தருவார் வாழ்வில் அனுதினமே...

நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 

திருச்சிற்றம்பலம்

தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை

கோடி நன்மை தரும் கோமடி சங்கு , தடுத்தாட்கொண்ட நாயகி ஸமேத தான்தோற்றீஸ்வரர் கோயில் - பெரும்பேர்கண்டிகை...

கோமடி சங்கு உள்ள கோவில் ..... கோமடி சங்கை  பசு மடியின் கீழ் கொண்டு வைத்தால் பசு தானாக பால் கரக்கும் அதிசயம் நிகழும் அற்புத சிவத்தலம்....

சங்கு வகைகளில் மிக உயர்ந்தது கோமடி சங்காகும். ஒரு லட்சம் வலம்புரி சங்குகள் தோன்றும் போது ஒரே ஒரு சங்கு ஒன்றாக கோமடி சங்காக கிடைக்கும். பசு (கோ) மடி போல இருப்பதால் அந்த சங்குக்கு அந்த பெயர் வந்தது. இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம். அம்பாளே இந்த அபிஷேகத்தை, சிவனுக்கு செய்வதாக ஐதீகம். தெட்சிணாமூர்த்தியின் சீடர்களான சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நால்வரும் நந்தி வடிவில் சிவனின் திருமணக்காட்சியை இங்கிருந்து கண்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

கோமடி சங்கால் ஈசனுக்கு செய்யும் அபிஷேகமானது, பசு மடியில் இருந்து நேரடியாக சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகமாக கருதப்படுகிறது. மேல்மருவத்தூர் அருகே உள்ள கண்டிகையில் உறைந்துள்ள தான் தோன்றீஸ்வரருக்கு தினமும் கோமடி சங்கில் அபிஷேகம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
கயிலையில் பரமேஸ்வரனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது, கூடிய கூட்டத்தால் உலகம் சமநிலை இழந்தது.

அதனை சமப்படுத்த அகத்தியரை அனுப்பினார் ஈசன்.

திருமண வைபவத்தைக் காணும் பாக்கியம் தனக்கு இல்லையே என்று அகத்தியர் நினைக்க, அவருக்கு விருப்பமான இடத்திலெல்லாம் மணக்கோலம் காட்டியருள்வதாகச் சொன்னார் மகேசன். 

பூவுலகம் வந்து உலகை சமநிலைப்படுத்தியதும் அகத்தியர் ஒவ்வொரு தலமாக இறைவனை தரிசித்துக் கொண்டும், சில இடங்களில் தவத்தை மேற்கொண்டும் வந்தார். அப்படியொரு நாள், மலைமீது அமர்ந்து அருள்பாலிக்கும் குமரக் கடவுளை தரிசிக்க வருகிறார். அவருக்கு முருகன் வள்ளி, தெய்வானை சமேதராகவும், ஞானத்தைப் போதிக்கும் தட்சிணாமூர்த்தி அம்சமாகவும் தெற்கு நோக்கி காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். பெரும்பேறு கண்டிகை என்ற அழகிய கிராமத்தில் அமைந்திருக்கும் சிறிய மலைக்குன்றின் மீது அமர்ந்திருக்கும் முருகப்பெருமான் தலமே அது. 

பின்பு அகத்தியர் அங்கிருந்து மேற்குப் புறத்தில் சுயம்பு மூர்த்தமாக, மணல் லிங்கத்தில் அமைந்திருக்கும் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து, அத்தலத்துக்கு அருகிலேயே தவத்தை மேற்கொள்கிறார். அப்படி அவர் தவம் செய்து கொண்டிருக்கும் நாளில், சித்ரா பௌர்ணமி தினம் வருகிறது. அப்போது தான்தோன்றீஸ்வர பெருமானை, இன்று இங்கு தங்களின் திருமணக் கோலத்தை காண்பித்தருள வேண்டும் என வேண்டுகிறார்.

உடனே உமாமகேஸ்வரன் தனது திருமணக்கோலத்தைக் காண்பித்து அருள்பாலிக்கிறார். இப்படி இறைவன் அகத்தியருக்குக் காட்சி தந்த தலம்தான், தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீசுவரர் திருத்தலமாகும்.

இங்கு சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக மணல்லிங்க வடிவில் ஆரம்பத்தில் இருந்து வந்தார். அபிஷேகம் செய்ய வசதியாக செப்புக் கவசம் அணிவிக்க இறைவன் இசைந்து அருள்புரிந்தாராம். அதன்படி தற்போது லிங்கத்தின் மீது செப்புக் கவசம் மாட்டப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.

சுவாமி சுயம்பு  5000 வருடத்திற்கு மேல் பழமையான கோயில். 5300 வருடம் பழமையானது என்று காஞ்சி சங்கர மடம் வெளியிட்ட புத்தகம் குறிப்பிடுகிறது.
திருவாத்தி மரத்தின் அடியில் அகத்தியர்க்கு ஸனகாதி முனிவர்களுடன் சிவபெருமான் திருமணக் காட்சி கொடுத்தது. இந்த திருவாத்தி மரத்தின் வயது 5000 வருஷங்களுக்கு மேல்.

விக்ரமாதித்தன் வழி பட்ட ஸ்தலம்.மிக அபூர்வமாக, இங்கு, வன துர்க்கைக்கு மான் வாஹனம் உள்ளது. வன துர்க்கை விக்ரஹத்தில் விக்ரமாதித்தன் வழிபடும் காட்சியும் உள்ளது.பெரிய அளவில் அகத்தியர் விக்ரஹம் உள்ளது.

திருவக்கரையில் துன்முகி  அரக்கியை சம்ஹாரம் செய்த காளி, அதே அவதாரத்தில் சண்டமுண்டனை இங்கு வதம் செய்தாள். ஆகையால் சாமுண்டேஸ்வரி என்று பெயர்.அரக்கி கர்ப்பமாக இருந்ததால், அவள் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியில் எடுத்து தனது  காதில் குண்டலமாக அந்த குழந்தையை வைத்துக் கொண்டு அரக்கியை வதம் செய்தாள். திருவக்கரையில்

இந்த வதம் செய்த அம்பாள் அதே கோலத்தில் இங்கே காட்சிதருகிறாள். திரிபுர சம்ஹாரதிற்கு புறப்பட்ட சிவ பெருமானின் தேர் அச்சு முறிந்தது. அவ்வழியாக வந்த அகத்தியர் இங்குள்ள முருகனை வழிபட்டு பின் அம்பாளிடம் திருமணக் காட்சி வேண்ட, அம்பாளும் இறைவனைத் தடுத்து இங்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுத்ததால் ,தடுத்தாட்கொண்ட நாயகி என்று பெயர்.

இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும், முருகன்,  அச்சிறுபாக்கத்திலிருந்து சுவாமியையும் அம்பாளையும் ஊர்வலமாக இந்த ஸ்தலத்திற்கு அழைத்து வந்து திருமணக் காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடந்து வருகிறது.

சுமார் 5300 வருடங்களைக் கடந்து நிற்கும் இவ்வாலயத்திற்கு பல்லவ பேரரசர்களும், சோழ மன்னர்களும் ஏராளமான திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்பதை இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.

தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் தான்தோன்றீஸ்வரர் காட்சி தருகிறார். தெற்கு நோக்கி அன்னை உமாதேவியார் தடுத்தாட்கொண்ட நாயகியாக அருள்பாலிக்கின்றார்.

சுற்றுப்பிராகாரத்தில் தனிச்சன்னதியாக தெற்கு புறத்தில் வடக்கு நோக்கி ரண பத்ர காளி சன்னதி அமைந்துள்ளது. திருவக்கரை வக்ரகாளியே இங்கு ரணபத்ரகாளியாகக் காட்சி கொடுக்கிறாள். சண்டன், முண்டன் என்ற இரு அசுரர்களை தேவர்கள் வேண்டுகோளின்படி அழித்த தேவி இவள்தானாம்.

இந்த ரணபத்ரகாளியை விக்கிரமாதித்தனும், பட்டியும் தரிசித்து வழிபட்டதாகவும், அதன் பிறகுதான் உறையூர் சென்று வெக்காளியம்மனை அவர்கள் தரிசித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.

இத்தலத்தில் காண்பதற்கரிய கோமடி சங்கு இருக்கிறது. ஒரு கோடி சங்கில் ஒரு சங்குதான் வலம்புரிச் சங்காகக் கிடைக்கும். அப்படி ஒரு கோடி வலம்புரிச் சங்கில் ஒரு சங்கே கோமடி சங்காக அமையுமாம்.

இந்தக் கோமடி சங்கை சாட்சாத் பரமேஸ்வரியின் ஸ்வரூபமான கோ(பசு) மடி, அதாவது பசுவின் மடிபோன்ற அமைப்பில் உருவாவது. இந்தக் கோமடி சங்கு இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது தோன்றி சுமார் ஆயிரம் வருடங்களுக்கு மேலிருக்குமாம். 

இந்த கோமடி சங்கால் சுத்த பசும்பால் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தோமானால் பரமேஸ்வரியே பரமேஸ்வரனுக்கு பாலபிஷேகம் செய்தது போன்றதாகுமாம். இதைச் செய்வோருக்கும், தரிசிப்போருக்கும் பல கோடி நன்மை கிடைக்கும் என்பதை திருவாடுதுறை ஆதீனத்தில் உள்ள ஓலைச்சுவடியில் காணலாமாம்.

இத்தலத்தின் தலவிருட்சம் திருஆத்தி மரமாகும். இத்தலத்தில் வடக்கில் காணப்படும் இம்மரத்தின் கீழ்தான் அகத்தியர் தவமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்ததாம்.

சுற்றுப்பிராகாரத்தின் மேற்கில் கனக துர்க்கை புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். அருகே ஒரு மான் நிற்க, எருமைத் தலையை மிதித்தபடி சுற்றிலும் கிளி, பட்டி, வேதாளம் மற்றும் சங்கு சக்கர கதாயுதத்துடன் காட்சி தருவது விசேஷமான வடிவம் ஆகும். இந்த கனகதுர்க்கை பித்ரு தோஷம் நீங்க அருள்பாலிப்பதாகவும் நம்பப்படுகிறது. 

முதலாம் குலோத்துங்கச் சோழனும், இரண்டாம் இராஜ இராஜ சோழனும் இக்கோயிலுக்கு நிலம் தானமாக வழங்கியுள்ளதை கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இப்போதுள்ள ரவிச்சந்திரன் சிவாச்சாரியாரின் மூதாதையர்கள் சூரியன் சந்திரன் இருக்கும் வரை சுவாமிக்கு பூஜை செய்வதாக சங்கல்பம் செய்துள்ளதாக கல்வெட்டு கூறுகிறது. 834 ம் வருஷம் முதல் (சுமார் 1200 வருஷங்கள்) இவர்கள் பரம்பரை பரம்பரையாக சுவாமிக்கு பூஜை செய்து வருகிறார்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், ரவிச்சந்திர சிவாச்சாரியாருக்கு, அவரது இறை சேவையைப் பாராட்டி, "பகவத் சேவை மணி " என்று சான்றிதழ் கொடுத்தள்ளார்கள்.

காலத்தைக் கடந்து நிற்கும் தடுத்தாட்கொண்ட நாயகி உடனுறை தான்தோன்றீஸ்வரர் திருத்தலத்துக்கு குடும்பத்தோடு வந்து தரிசியுங்கள். பல அதிசயங்களை தன்னுள் கொண்டிருக்கும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அச்சிறுபாக்கத்தை அடுத்து தொழுபேடு என்ற இடத்தில் இறங்கி சுமார் 1 கி.மீ. தூரம் வடக்கில் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

திதிகளின் தெய்வங்கள்

திதியை பிடித்தால் விதியை!
           வெல்லும்!!

திதிகளின் தெய்வங்கள்
ஆலயங்களில் உள்ள இறைவனை வழிபடும் அதே வேளையில், நாம் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களையும் வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும். இங்கே திதிகளும், அவற்றுக்கான தெய்வங்களும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை அறிந்து உங்கள் வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள்.

சுக்லபட்சம் (வளர்பிறை)


1. பிரதமை - குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை - பிரம்மா
3. திரிதியை - சிவன் மற்றும் கவுரி மாதா
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - திரிபுர சுந்தரி
6. சஷ்டி - செவ்வாய்
7. சப்தமி - ரிஷி மற்றும் இந்திரன்
8. அஷ்டமி - காலபைரவர்
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - வீரபத்திரர் மற்றும் தர்மராஜன்
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - மகா விஷ்ணு
13. திரயோதசி - மன்மதன்
14. சதுர்த்தசி - காளி
15. பவுர்ணமி - லலிதாம்பிகை

கிருஷ்ணபட்சம் (தேய்பிறை)

1. பிரதமை - துர்க்கை
2. துவதியை - வாயு
3. திரிதியை - அக்னி
4. சதுர்த்தி - எமன் மற்றும் விநாயகர்
5. பஞ்சமி - நாகதேவதை
6. சஷ்டி - முருகன்
7. சப்தமி - சூரியன்
8. அஷ்டமி - மகா ருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி - சரஸ்வதி
10. தசமி - எமன் மற்றும் துர்க்கை
11. ஏகாதசி - மகா ருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி - சுக்ரன்
13. திரயோதசி - நந்தி
14. சதுர்த்தசி - ருத்ரர்
15. அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி,

அவரவர் பிறந்த திதிக்கான தேவதையை வழிபட வாழ்வில் வெற்றி கிட்டும், பிறப்பு தோஷம் நீங்கும்.