Friday, December 7, 2018

தெய்வத்தின் குரல்


தெய்வத்தின் குரல்

அரூபமான ஒரே பரமாத்மா பல ரூபங்களில் பல தேவதைகளாக வருகிறதென்று சொல்லி, அவற்றுக்காக விக்கிரக ஆராதனைகளை ஏற்படுத்தியிருப்பது நம் மதத்தின் இன்னொரு பிரத்தியேக அம்சம். இதனால் அந்நியர்கள் நம்மைப் பல — தெய்வக் கொள்கையினர் (poly-thesis) என்கிறார்கள். இப்படிச் சொல்வது சுத்தத் தப்பு. ஒரே தெய்வத்தைப் பல ரூபத்தில் வழிபடுவது பல தெய்வங்கள் இருப்பதாக எண்ணுவதாகாது. அவ்வாறே ‘ஹிந்துக்கள் விக்கிரகம்தான் ஸ்வாமி என்று நினைத்து, விக்ரஹ ஆராதனை (ldolatry) செய்கிறார்கள்’ என்பதும் முழுப் பிசகு. விக்ரஹம் மட்டும்தான் ஸ்வாமி என்று விஷயமறிந்த ஹிந்து எவனும் நினைக்க மாட்டான். எங்குமுள்ள ஸ்வாமி இவன் மனஸை ஒருமுகப்படுத்தி ஆராதிக்க வசதியாக இந்த விக்ரஹத்தில் இருப்பதாகத்தான் நினைத்து ஆராதிக்கிறான். எந்த மதமானாலும் சின்னங்கள் (Symbol) வைத்துப் பூஜிப்பதையோ, தியானிப்பதையோ பார்க்கிறோம். அப்படி இருக்க, ஹிந்துக்களின் மூர்த்தி பூஜையை மட்டும் உருவ வழிபாடு என்பதோ, அதற்காகப் பரிகசிப்பதோ துளிக்கூட நியாயமற்றதாகும்.

ஹிந்து மதஸ்தர்கள் ரொம்பவும் பெருமைப்பட வேண்டிய அம்சம், இந்த மதம் ஒன்றுதான் தன்னை அநுசரிப்பதுதான் மூலமே ஒரு ஜீவன் உய்வு பெற முடியும் என்று ஒரு தனி உரிமை (exclusive right) கொண்டாடிக் கொள்ளாமலிருப்பதேயாகும். யார் யார் எந்தெந்த சமய மார்க்கத்தில் போனாலும் கடைசியில் ஒரே பரமாத்மாவிடம் வந்து சேருவார்கள் என்பதை ஒப்புக் கொள்ளுகிற விசால மனப்பான்மை (open accepting outlook) நம் சாஸ்திரங்களிலேயே காணப்படுகிறது. இதனால்தான் பிறரை ஹிந்துவாக மத மாற்றம் (Conversion) செய்ய நம் சாஸ்திரங்கள் இடம் கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment