Monday, April 4, 2016

கங்கை ஓர் ரசாயனச் சாலை

கங்கை ஓர் ரசாயனச் சாலை


கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீர்களுக்கும் கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை - சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம். கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர்கள் சில வாரங்களிலேயே நாறிவிடும்.
ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு கெட்டு நாறாமல் இருக்கிறது கங்கை! இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல.
கங்கையின் பிறப்பிடம் ‘கங்கோத்ரி’ என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது. சூஃபிகளின் ஊரான ‘அல்குஃபா’ பற்றி முன்பு குறிப்பிட்டேன். ஒரு நோக்கம் எதுவும் இல்லாமல் அங்கே நம் உடலுடன் போய் விடுவது சாத்தியம்தான். அங்கே தேடிப் போக விரும்பினால், தவறான வரைபடத்தைத் தந்து விடுவார்கள்! தேடிப் போகாமல், எந்த நோக்கமும் இல்லாமல் போனால், எதிர்பாராமல் அங்கே போய்விடக்கூடும்.
எதிர்பாராமல் அல்குஃபாவை அடைந்து விடுவது சாத்தியமே தவிர, கங்கையின் பிறப்பிடத்தை அடைவது சாத்தியமே இல்லை. பருவுடல் தாங்கி அங்கே செல்ல முடியாது. ஆனால், சூட்சும சரீரத்தில் போகமுடியும். உண்மையான கங்கோத்ரி சாதாரணக் கண்களுக்குத் தெரியாது. தியானத்தில், பருவுடல் பின்னே தங்கிவிட, சூட்சும சரீரம் கங்கோத்ரியை நோக்கிப் பயணம் செய்யும். அப்போதுதான், அப்போது மட்டுமே, கங்கை நீரின் சிறப்பு அம்சங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதனால்தான், அதை நிரூபிக்க முடியாது என்று சொன்னேன், நிரூபிக்க எந்த வழியும் இல்லை. கங்கையின் பிறப்பிடத்தில் ரசவாதம் நிகழ்கிறது. அதனால்தான், கங்கையின் இரு கரைகளிலும் புனிதத் தலங்களை இந்துக்கள் அமைத்திருக்கிறார்கள். இந்துக்களின் புனித தீர்த்தத் தலங்கள் ஆற்றங்கரைகளிலும் சமணரின் புனிதத் தலங்கள் மலைகளின் உச்சியிலும் ஏன் அமைந்திருக்கின்றன என்று நீங்கள் வியப்படையலாம்.
பசுமையற்ற வறண்ட மலைமீதே சமணரின் புனிதத் தலங்கள் அமைந்திருக்கின்றன. பசுமையான மரச்சோலைகள் நிறைந்த மலைகள் விலக்கப்படுகின்றன. இமயம் போன்ற அழகிய மலைகள்கூட நிராகரிக்கப்படுகின்றன. ஒரு மலை வேண்டுமென்றால், இமயமலையைவிடச் சிறந்தது வேறு என்ன கிடைத்துவிடும்?
ஆனால், சமணர்கள் வேண்டுவதோ வறண்ட மலைகள்! வெயில் காயும், பசுமையற்ற சூடேறிய பாறைகள் கொண்ட, தண்ணீர் இல்லாத மலைகள்! காரணம், அவர்கள் அனுபவிக்கும் ரசவாதம் உடலின் வெப்பத்துடன் தொடர்புடையது. இதற்கு நேர் மாறாக, இந்துக்களின் ரசவாதம் தண்ணீர் என்ற மூலகத்துடன் தொடர்புடையது. ஒவ்வொருவருக்கும் தனித்தனி சாவிகள். ஆறோ, குளமோ, பசுமையோ இல்லாத இடம் இந்துக்களுக்குத் தீர்த்தத்தலம் ஆகாது. இவர்களின் சோதனையெல்லாம் தண்ணீரின் தொடர்பு கொண்டவை. இவர்களின் புனிதத்தலங்கள் தண்ணீரை ஆதாரமாகக் கொண்டவை.
தண்ணீரால் உருவானவை. ஆனால் சமணத் தலங்கள் நெருப்பாதாரம் கொண்டவை. உடலில் நெருப்பைப் பாய்ச்சும் இடங்களே அவர்களின் புனிதத் தலங்கள். 
இந்து வேதங்களும், முனிவர்களும், நீர் ஆதாரத்தையே வலியுறுத்துகிறார்கள். அதனால்தான், இந்து சன்னியாசிகள் பால், தயிர், வெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். தம்முடலில் ஈரப்பதம் இருப்பதற்காக, தேவையான ஈரப்பதம் இல்லாவிட்டால், இந்து சாவி திறக்காது! இதற்கு மாறாக, உடலில் வறட்சியை ஏற்படுத்துவதே சமணரின் நோக்கம். இந்த வறட்சியைப் பாதுகாக்க வேண்டியிருப்பதால்தான் அவர்கள் குளிப்பதில்லை! சமண சன்னியாசிகளின் உடல் அழுக்கேறி நாறுவது இதனால்தான். ஆனால் குளிக்காமைக்கான காரணத்தை அவர்களால் விளக்க முடிவதில்லை.
ஏன் அவர்கள் எப்போதாவது குளிக்கிறார்கள்? அவர்களுடைய சாவி தண்ணீர் அன்று; நெருப்பு. நெருப்புத்தான் அவர்களின் தவம். அதுதான் சுய சித்ரவதை! எல்லாவகையிலும் உள்ளே தீயை எழுப்புவதுதான் சமணரின் நோக்கம். அவர்களின் உடல்களின் மேல் தண்ணீர் ஊற்றினால் உள் நெருப்பு பலவீனப்பட்டுவிடும் என்று நினைக்கிறார்கள். அதனால், பசுமையற்ற, நீரற்ற, வறண்ட மலைகளில் நாம் சமண முனிவர்களைப் பார்க்க முடிகிறது. சூடேறிய பாறைகளின் சூழலில்தான் அவர்கள் இருப்பார்கள்! எல்லா மதங்களிலும் உண்ணாவிரதம் உண்டு. விரதத்தின்போது தண்ணீர் அருந்தலாம். ஆனால், சமணம் நீர் அருந்தக் கூடாது என்கிறது! இல்லறச் சமணர்களால், வீட்டில் தண்ணீர் பயன்படுத்துவது தவிர்க்க முடியாத ஒன்று. அதனால், குறைந்த பட்சம் இரவிலாவது தண்ணீர் குடிக்காமல் இருக்குமாறு அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள். ஆனால், தண்ணீரோடு சேர்ந்து பூச்சி புழுக்கள், கிருமிகள் உள்ளே போய்விடக்கூடாது என்பதற்காகவே அந்த நிபந்தனை விதிக்கப்படுவதாக சமணர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமணரின் எல்லா விதிகளுமே அகத் தீயைக் கொழுந்துவிட்டு எரியச் செய்வதற்காகத்தான். மகாவீரரைப் போலக் குறைந்த அளவு நீர் அருந்துவதால், ஆணின் விந்து வறண்டு போய் விடும் என்பது இன்னொரு செய்தி! அதனால், பிரம்மச்சரியம் காப்பது எளிதாகி விடுகிறது. கொஞ்சம் ஈரப்பதம் உடலில் இருந்தாலும் விந்து பாயத் துடிக்கும்! சமணரின் ஆதாரபூர்வமான புனிதத் தலங்கள், வறண்ட இடங்களில் அமைந்திருந்தாலும், பிற்காலத்தில் அவர்கள் மற்றவர்களைப் பார்த்து, நீர் நிலைகள் அருகே புனித இடங்களை அமைக்கத் துவங்கினார்கள். இவை அர்த்தமற்றவை. ஆதார பூர்வமானவையும் அல்ல. இந்துக்களின் ஆதாரபூர்வமான தீர்த்தத்தலம், ஆற்றங்கரைகளில், பசுமை விரித்த அழகிய சோலைகள் அருகேதான் இருக்கும். ஆனால், சமணர் தேர்ந்தெடுத்த மலைகள் அழகற்றவை. பசுமை இருந்தால்தானே அழகிருக்கும்?
சமண முனிவர் குளிக்காததோடு பல்லும் விளக்க மாட்டார்! பல் விளக்கவும் தண்ணீர் வேண்டுமே! இந்த வறட்சியின் அடிப்படையைச் சமண வேத நூல்களின் மூலம்தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அவர்களின் கடுந்தவமே அகத்தீயை எழுப்புவதுதான். தண்ணீரின் தொடர்பால் தீயின் கடுமை குறைந்துவிடும். தண்ணீரின் இந்தப் புறக்கணிப்பு, தீயைக் கொழுந்து விட்டு எரியச் செய்வதற்கான எதிர்மறை வழி. நமக்குள் மூலகங்கள் சமநிலையில் உள்ளன. ஏதாவது ஒரு மூலகத்தின் மூலமாக ஆன்ம பயணம் போக விரும்பினால், அதற்கு மாறான மூலகங்களைப் புறக்கணிக்க வேண்டி நேர்கிறது. நெருப்பின் மீது கவனம் செலுத்தினால் நீர் அதற்கு விரோதமாகிறது. நீர் குறையக் குறைய உள்ளே நெருப்பு கனன்று எரிய ஆரம்பிக்கும். கங்கையில் ரசாயனச் சோதனையும் நடக்கிறது; ரசவாதமும் நடக்கிறது. கங்கையில் குளித்த பின் ஒருவர் புனிதத்தில் பிரவேசித்து விடலாம்.
கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். இன்னொன்றையும் மறந்து விடக்கூடாது. கங்கை நீரையே அருந்தி வருபவர், வேறு நீர் அருந்தினால், சிரமத்தில் சிக்கிக் கொள்வார்! கங்கை நீரைப் போலவே இருக்கும்படி மற்ற ஆற்று நீரையும் மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முடியவில்லை. காரணம், சாவி தொலைந்துவிட்டது! கங்கையில் நீராடிய பின், கோயிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான். வேறு மூலகங்களும் புண்ணியத் தலமாகப் பயன்படுகின்றன. அவை மிகுந்த அக்கறையுடன் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக, மறைந்த எகிப்திய நாகரிகத்தால் உருவாக்கப்பட்ட பிரமிடுகளைச் சொல்லலாம். பிரமிடுகள் தீர்த்தத் தலங்கள்!
பிரமிடுகளில் உள்ள சுவையான அம்சம், அதற்குள் பரிபூரண இருள் குடிகொண்டிருப்பதுதான். அந்தக் காலத்தில் மின்சாரம் கிடையாது. அவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் உள்ளே சென்றவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில்தான் போயிருக்க வேண்டும். ஆனால், சுரங்கப் பாதைச் சுவர்களில் புகையின் சுவடே இல்லை! பிரமிடுக்குள் செல்லும் பாதை வளைந்து வளைந்து நீண்டு செல்வது. எப்படிப் போனார்கள்? எண்ணெய், நெய் விளக்குகள் கொண்டு போனதற்கான அடையாளமும் உள்ளே இல்லை. யாருமே உள்ளே செல்லவில்லையென்றால், அந்தப் பாதைகள், படிக்கட்டுகள், கதவுகள், உட்சாளரங்கள் எல்லாம் எதற்காக?
பெரிய புதிர்தான்! புதிர் அவிழாமல் போனதற்குக் காரணம் அந்தப் பிரமிடுகள் மன்னரின் சமாதிகள் என்ற தவறான கருத்துத்தான். உண்மையில் அவை தீர்த்தத் தலங்கள். அகத்தின் நெருப்பில் சோதனை செய்பவரின் உடல் ஒளிவீசும்! அப்படிப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே நுழையத் தகுதி படைத்தவர்கள். மின்னொளியும், தீப்பந்தமும் இல்லாமல், தம் உடலின் ஒளி கொண்டே மேன்மக்கள் உள்ளே சென்றிருக்க வேண்டும்! ஆனால், அந்த உடல் வெளிச்சத்தை, தீயுடன் தொடர்பு கொண்ட சில தனிச் சிறப்புடைய தியான முறைகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். உள்ளே செல்கிறவர்களுக்கான தகுதியாக அந்த உடல் வெளிச்சம் அன்று கருதப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரமிடுகளை ஆராயப் பல விஞ்ஞானிகள் முயன்றார்கள். அவர்களில் ஒரு விஞ்ஞானியின் உதவியாளர் காணாமல் போய்விட்டார். எல்லோரும் உள்ளே செல்லும் பாதைகளில் விளக்கொளியில் தேடினார்கள். ஒரு முழுநாள் ஆகியும் அவர் கிடைக்கவே இல்லை. அப்புறம் அவர், இரவு இரண்டு மணிக்கு வெளியே ஓடோடி வந்தார், பைத்தியம் பிடித்தவர் போல!
‘‘‘நான் சுரங்க இருளில் போய்க் கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு வழி திறந்தது போல் தோன்றியது. தொடர்ந்து மேலே போனேன். குறிப்பிட்ட இடத்தைக் கடந்ததும் சட்டென என் பின்னால், கதவு மூடியது போல வழி அடைத்துக் கொண்டது. திரும்பி நகர்ந்து தடவிப் பார்த்தேன். ஒரு பாறை நான் வந்த வழியை அடைத்துக் கொண்டிருந்தது, கதவு போல. அது எப்படி, எங்கிருந்து நகர்ந்து வந்து கச்சிதமாக அடைத்துக் கொண்டது என்பது தெரியவில்லை. சத்தம் போட்டுப் பார்த்தேன். பயனில்லை வேறு வழியில்லாமல் தொடர்ந்து இருளில் போய்க் கொண்டே இருந்தேன். அப்புறம், நான் எப்படி வெளியே வந்தேன் என்பதே தெரியவில்லை. அதை விளக்கிச் சொல்ல என்னால் முடியவில்லை!’’ என்றார் அவர். அவர் அரைக் கிறுக்குப் போல் உளறினார். எதை எதையோ பார்த்ததாக உளறினார். மற்றவர்கள் எவ்வளவோ தேடிப் பார்த்தும் அவர் எந்த இடத்திலிருந்து அவர் வெளியேறினார் என்பதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை!
அவர் மயங்கி விழுந்து கனவு கண்டிருக்க வேண்டும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். என்றாலும் அவர் சொன்னதை, சொன்னபடியே எழுதி வைத்து விட்டார்கள். தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த போது, ஒரு எழுத்துப் பிரதி அவர்கள் கைக்குக் கிடைத்தது. அதிலும் அந்த ஆள் சொன்னது போலவே அவருக்கு முன்பு யாரோ எழுதி வைத்திருந்தார்கள்! அதனால் மர்மம் துலங்கவில்லை; மேலும் ஆழமாகி விட்டது! சில மனிதருடைய மனோநிலைக்கு ஏற்றபடி உள்ளே நிகழ்ச்சிகள் நடக்கின்றனவா அல்லது எதேச்சையானதா என்பது தெளிவாகவில்லை. சிலரின் சில மனோநிலைகள் கதவைத் திறக்கவும், மூடவும் செய்யுமோ? எப்படி என்று தெரியவில்லை. ஆனால், கதவு திறப்பதற்கான வழியும் வேறு இருப்பதாகத் தெரியவில்லை.
நான் குறிப்பிடும் ரகசிய இடங்களுக்கான கதவுகள் இருக்கின்றன; சாவிகளும் இருக்கின்றன. ஆனால், அவை மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த இடங்கள், ஒருவரது பிரக்ஞையைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. பிரமிடின் உள் மண்டபங்கள், அறைகள், அவற்றின் அளவுகள் திட்டவட்டமான முறையில் அமைக்கப்பட்டிருப்பதே இதற்குச் சான்று. அறையின் மேற்பகுதி தாழ்வாக இருந்தால், ஏதோ ஒன்று உங்களை அழுத்துவது போல் உணர்வீர்கள். உங்களை எதுவுமே அழுத்துவதில்லைதான். ஆனால். உங்களுக்குள் அப்படிப்பட்ட உணர்வு தோன்றி விடுகிறது. உயர்ந்த மேற்பகுதி கொண்ட விசாலமான அறைகளுக்குள் நுழையும்போது, நமக்குள் ஏதோ விசாலமடைவதாக உணர்கிறோம். தியானத்திற்கு உதவும் முறையில் அறைகளை அமைத்து விட முடியும். ஒவ்வொரு புனித இடத்திற்கும் தனி இசை உண்டு. எல்லா இசைகளும் அப்படிப்பட்ட இடங்களிலிருந்தே பிறக்கின்றன.
அவை தியானம் செய்பவர்களால் உருவாக்கப்பட்டவை. இசைக்கலை மட்டுமல்லாமல் நாட்டியக் கலையும் கோயில்களிலேயே தோன்றின. நறுமணம் கூட முதன் முதலில் கோயில்களில்தான் பயன்படுத்தப்பட்டது. இசையால் இறைவனை அடையலாம் என உணரப்பட்டது. இசையின் மூலமாக அதற்கு நேர்மாறான திசையிலும் நாம் போகலாம். குறிப்பிட்ட நறுமணம் தெய்வத்தை நெருங்கச் செய்யும். இன்னொரு நறுமணம் புலன் உணர்வுகளைத் தூண்டி விடும். சில அறைகளில் விரைவில் தியானம் கை கூடும். சில அறைகளில் தியானம் தடைபட்டு விடும்! கைதிகளை மூளைச் சலவை செய்வதற்காக சீனாவில், தனிப்பட்ட அறைகளைக் கட்டினார்கள். முன்கூட்டித் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை அவை. அளவுகள் மாறிவிட்டால், மூளைச் சலவை சிரமமாகிவிடும். பல நீண்ட சோதனைகளுக்குப் பிறகே, அவற்றின் நீள, அகல, உயரங்கள் வரையறை செய்யப்பட்டன. அந்த மாதிரியான அறைக்குள் நுழைந்தவுடனே கைதியின் மனதில் பாதிப்பு உண்டாகி விடுகிறது.
அவனது மனம் மாறுவதற்கு அல்லது சிதைவதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதும் கண்டறியப்பட்டது! அத்தகைய மனச் சிதைவை சில இசைகள் விரைவுபடுத்தும் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டது! தலையின் மீது குறிப்பிட்ட இடத்தில் அடித்தாலும் அது விரைவாகும்! கைதியின் தலைக்கு மேல் நீர் நிறைந்த பாத்திரம் தொங்கும். அதனடியில் ஒரு சிறு துளை. நீர், துளித் துளியாக அவனது உச்சந்தலை மேல் சொட்டிக் கொண்டிருக்கும். அவன் நின்று கொண்டிருப்பான். அசையாதபடி கட்டிப் போடப்பட்டிருப்பான். தலையையும் அசைக்க முடியாது. உட்காரவும் முடியாது!
ஒரு மணி நேரத்திற்கு மேல் கைதியால் தாக்குப் பிடிக்க முடியாது. தண்ணீர் தலைமேல் கொட்டும் சப்தம் பெரிதாகிக் கொண்டே போகும்! கடைசியில் மலையே தலை மீது விழுவது போல் தோன்றும்! குறிப்பிட்ட அளவுள்ள அறையில், திரும்பத் திரும்ப தலையில் நீர் சொட்டும் போது, இருபத்து நான்கு மணி நேரத்தில் அவனது புத்தி பேதலித்து விடும். அப்புறம் அவன் பழைய ஆள் அல்ல. முற்றிலும் மாறியிருப்பான். என்றாலும் இதைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டே இருப்பார்கள்!
நன்றி: கண்ணதாசன் பதிப்பகம்

No comments:

Post a Comment