Sunday, July 3, 2016

தமிழ், சமஸ்கிருதம்

சுத்தாத்துவித சைவசித்தாந்திகளும், சமஸ்கிருதமும்- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி


அண்மைக் காலத்தில் சமஸ்கிருதமொழி பற்றிய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அவ்விவாதங்கள் பெரும்பாலும் அரசியல், சாதி, மத வேறுபாட்டுக் கண்ணோட்டத்துடனே நடைபெறுகின்றன. புதுமைநாடும் சைவர்கள் சிலரும் இவ்விவாதங்களில் கலந்துகொண்டு, திருமுறைத் தமிழினை உயர்த்துவதாகக் கருதிக்கொண்டு வடமொழியைத் தூற்றுகின்றனர். இதில் கலந்துகொள்ள விருப்பமில்லாத ஒருசார் சைவசித்தாந்திகள் உள்ளனர். அவர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பயன்பாடு குறித்து அவர்களுடைய ஆச்சாரியர்கள் அல்லது குருமார்கள் கூறிய கருத்தின்வழி ஒழுகுவதே பெரும் பயன்தரும் எனும் நம்பிக்கையுடையவர்கள்.
சைவசமயக் கருத்தரங்கு ஒன்றில் இளைய மடாதிபதி ஒருவர் தமிழை வடமொழியைக் காட்டிலும் உயர்வுடையதாகக் காட்டும் நோக்கில், திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவர் பாடிய,
“கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த விப்பசுந்தமி ழேனை
மண்ணிடைச் சிலவிலக்க ணவரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்த தாவெண்ணவும் படுமோ”
என்னும் செய்யுளை ஆரவாரமாகச் சொன்னார். அவருடைய கருத்து வடமொழி இலக்கண வரம்பற்றதென்று கூறுவது.  பாமரரே இதற்குக் கைதட்டுவர்; தமிழினை முறையாகக் கற்றவர் இகழ்ச்சிநகையே புரிவர்.
தமிழின் ஆற்றலைப் பறைசாற்றுவதாக அவர் கூறிய மற்றொரு பாடல்,
“தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை
உண்ட பாலனை யழைத்ததும் எலும்புபெண் ணுருவாக்
கண்டதும் கதவினைத் திறந்ததும் கன்னித்
தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”
இவ்வாற்றல் தமிழுக்கே உண்டெனில். இப்பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள அதியற்புதச் செயல்களை நிகழ்த்திய சமயாச்சாரியர்களை, இதைக் காட்டிலும் ஒருவர் இழிவுபடுத்த முடியாது. இந்த மடாதிபதி பரஞ்சோதியாரின் திருவிளையாடற் புராணத்தை முழுவதும் படித்திருக்கமாட்டார். படித்திருந்தால் திருமணப்படலத்தில் பரஞ்சோதி முனிவர் பாடியுள்ள செய்தியொன்று அவர் பார்வையிற்பட்டிருக்கும்.
“பந்த நான்மறைப் பொருட் டிரட்டென வடபாடல் செய்தெதிர் புட்ப
தந்த னேத்த வானுயி ருணவுருத் தெழுதழல் விடத்தெதிர் நோக்கும்
அந்த மாதி யிலானிழல் வடிவமா யாடியினிழல் போல
வந்த சுந்தரன் சாத்து நீறொடு திருமாலையுமெடுத் தேந்த”
சோமசுந்தரக் கடவுள் திருமணக்கோலம் கொள்ளும்போது, நான்கு வேதப்பொருள்களின் திரட்டென வடமொழியில் பாடல்செய்து புட்பதந்தன் என்பான் புகழ்ந்துபாட, ஆடியில் தோன்றும் பிரதிபிம்பம்போன்ற ஆலாலசுந்தரன் சுவாமிக்குச் சாத்தும் திருநீறொடு திருமாலையும் எடுத்தேந்தினான் எனும் இப்பாடலில் தெய்வமணமகனை புட்பதந்தர் வடமொழிப் பாடலில் போற்றினார் எனப் பரஞ்சோதியார் கூறுகின்றார்.
புட்பதந்தர் பாடிய அத்தோத்திரம் ‘ சிவமஹிம்ந ஸ்தோத்திரம் ‘ என்பதாகும்.  (இந்நூலை ஆங்கிலத்தில் ஆர்தர் அவலான் எனும் புனைபெயரில் சர் ஜான் உட்ராஃப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, குறிப்புரையுடன் வெளியிட்டுள்ளார்)
இவ்விடத்தில் கொங்குநாட்டில் தலைசிறந்த துறவியாகவும் கவிஞராகவும் திகழ்ந்த கௌமாரமடாலயம் தவத்திரு கந்தசாமி சுவாமிகளுக்கும் திருமந்திரமணி எனும் விருதுபெற்ற துடிசைக்கிழார் எனும் அறிஞருக்குமிடையே நடைபெற்ற உரையாடலை அறிதல் நலம். துடிசைக்கிழார் கொங்குநாட்டு இலக்கியங்கள் சிலவற்றையும் திருமந்திரத்தையும் பதிப்பித்த நல்ல அறிஞர். தமிழ்மீது பெரும் பற்றுடையவர். அந்த மோகத்தின் காரணமாகப் பிறமொழிகளைத் தாழ்வாகக்கருதும் மயக்கம் உடையவர்.
துடிசைக்கிழார்: சுவாமி! நம் செந்தமிழுக்கு வடமொழி ஒருபோதும் சமமாகாது. எலும்பைப் பெண்ணாக்கியதும் அரவுதொட்ட பாலகனை எழுப்பியதும் முதலையுண்ட சேயை மீட்டளித்ததும் தேவாரப் பாசுரங்கள்தாமே; வடமொழி வேதமந்திரங்களோ சுலோகங்களோ அல்லவே! இவற்றால் தமிழே வடமொழியைவிட உயர்வானது என்பது உறுதியாகின்றதல்லவா?
சுவாமிகள்: பெரியீர்! வடமொழியில் சிவபெருமானும் பிரமனும் எண்ணற்ற முனிவர்களும் வேதம், ஆகமம், இதிகாசம், புராணம் துதிப்பனுவல்கள், தத்துவ நூல்கள் எனப் பலவற்றை வழங்கியுள்ளனர். நம் தமிழிலும் திருக்குறள், திருமந்திரம், தேவார-திருவாசக, திவ்வியப்பிரபந்தம், சிவஞானபோதம் முதலிய சாத்திர-தோத்திரங்கள் என எல்லாக் கலைச்செல்வங்களும் நிரம்பியுள்ளன. இந்நிலையில் ஒருமொழியை உயர்த்துவதற்காக மற்றொன்றைத் தாழ்த்துவது பண்புடைமை ஆகாது.
கிழார்: திருஞானசம்பந்தர் ‘மட்டிட்ட புன்னையங்கானல்’ எனத்தொடங்கும் தமிழ்ப் பதிகத்தால்தானே அங்கம் பூம்பாவை ஆக்கினார்? அப்பர், ‘ஒன்றுகொலாம்’ எனும் தேவாரப் பதிகம் பாடியதால்தானே அரவுதீண்டிய மைந்தன் உயிர்த்தெழுந்தான்? சுந்தரரின், ‘எற்றால் மறக்கேன்’ எனும் திருப்பதிகம் தானே முதலையுண்ட பாலகனை வரவழித்தது? இவர்கலெல்லாம் வடமொழியில் பாடவில்லையே? அந்த மொழிக்கு ஆற்றல் இருந்திருந்தால் அதில் பாடியிருப்பார்கள் அல்லவா?
சுவாமிகள்: (புன்முறுவலுடன்) எலும்பு பெண்ணானதும் அரவால் மாண்ட மகன் மீண்டதும், முதலைவாய்ப் பிள்ளை வந்ததும் தமிழ்மொழியின் தனி ஆற்றலால் என்பதுதானே தங்கள் கருத்து?
கிழார்: ஆமாம் சுவாமி! அப்படியேதான். இதில் சற்றும்  ஐயமே இல்லை..
சுவாமிகள்: நல்லது. நீங்களும் நானும் நன்கு தமிழ் கற்றவர்கள்; தமிழிற் பற்பல பாடல்களைப் பாடியவர்கள்; நமது தமிழ்ப்புலமையிலும் தமிழ் உணர்விலும் சற்றும் குறையில்லை. மூவர் முதலிகள் தேவாரம்பாடிய அதே யாப்பில், நாம் பாடினால் செயற்கரும் செயல்கள் ஏதேனும் நடக்குமா?
கிழார்: அது எப்படி இயலும்? நடக்காது.
சுவாமிகள்: மூவர் முதலிகள் வடமொழிச் சுலோகங்களாகவோ அல்லது வேறு ஏதாவது மொழியில் ஏதாவதொரு வடிவில் கூறியிருந்தால் அந்த அற்புதங்கள் நடந்திருக்குமா? நடந்திருக்காதா?
கிழார்: கட்டாயமாக நடந்திருக்கும்.
சுவாமிகள்: அற்புதங்கள், சித்திகள் போன்றவையெல்லாம் மொழியால் நடப்பவை அல்ல. ஆன்மீக வல்லமைபெற்ற மகான்களின் ஆணைவழி, இறைவனின் திருவருளால் நிகழ்பவை. தமிழ், வடமொழி மட்டும் அல்ல; தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி போன்ற இந்தியமொழிகளிலெல்லாம் இறைவனை வேண்டிச் செயற்கரும் செயல்களைச் செய்த மகான்களின் பாடல்கள் காணப்படுகின்றன.  அண்டசராசரங்களையெல்லாம் கடந்து விளங்கும் பரம்பொருளை — அதனை நீங்கள் சிவபெருமான் என்றோ, திருமால் என்றோ — எப்படிக் கூறினாலும் சரி — ஏதோவொரு மொழிக்குமட்டும் உரியதாகச் சொல்வீர்களேயாகில் பரத்துவம் என்னாவது? இந்திய மொழிகள் மட்டுமல்ல; உலகமொழிகள் அனைத்துமே உண்மையான அருளாளர்களுக்கு இறையருளைப் பெறுவதற்கு ஏற்ற கருவிகளேயாகும்.
மொழிப்பற்று வேண்டற்பால நற்பண்பு; அதேசமயம் மொழிவெறி ஒதுக்கவேண்டிய இழிதகைமை. வடமொழி தென்மொழியாளர்களிடையே ஒரு சிலரிடத்து மிக்குவிளங்கும் இந்த அறிவற்ற மூர்க்கத்தனம் அறிவுடைய சான்றோர்க்கு ஆகாதது.”     (சிரவையதீனம் தவத்திரு கந்தசுவாமிகள் வரலாறு, சிரவைக் கௌமாரசபை வெளியீடு, 20-11-1999)
  சுவாமிகளின் கருத்தே சுத்தாத்துவித சைவசித்தாந்திகளின் கருத்தாகும்
சுத்தாத்துவித சைவசித்தாந்தத்தின் ஆசிரியன்மார் இம்மொழிகளைப் பற்றிக் கூறிய கருத்துக்கள்தாம் யாவை?
“வைதிக சமயமாகிய சைவசித்தாந்த சமயம் தமிழ்நாட்டில் அநாதி காலமாகப் பயின்று வந்தது. ஏனைய சமயங்கள் யாவும் இதன்பின் தோன்றின என்பது பொருந்தும். இச்சமயமானது ஆதியில் இந்தியநாடு முழுமையும் வியாபித் திருந்தது என்று பெரியோர் சொல்வர்.காசுமீரத்தில் இன்றும் சைவசமயத்துள் ஒருபிரிவு வழக்கிலிருப்பதும், மொஹஞ்சதரோ அகழ்பொருள்களில் சைவச்சின்னங்கள் காணப்படுவதும் இதற்குச் சான்று பகரும்.
வேதம், சிவாகமம் இரண்டையும் சைவசித்தாந்த சமயம் தனக்கு ஆதாரங்களாகக் கொள்ளும். இவை வடமொழி நூல்கள். இன்று சிலர் தவறாகக் கருதுவதுபோல, வடமொழி ஒரு சாதிக்கே உரிய மொழியாக இருந்ததில்லை; தமிழ் நாட்டில் ஞான நாட்டமுடையோர் அனைவருமே வடமொழி வல்லவராயிருந்தார்கள். எல்லாருமே வடமொழியில் சமயநூல் எழுதியும் உரையெழுதியும் சமயத்தை வளர்த்ததொடு, தமிழொடு வடமொழியையும் வளர்த்தார்கள். அம்மொழி, தமிழருக்கும் உரிய மொழியாகவே இருந்தது.” (மு. அருணாசலம், தத்துவப் பிரகாசம், முதற்பதிப்பின் முன்னுரை,1965),.
            தமிழின் இனிமையை நுகரவிரும்புவோர் குமரகுருபரசுவாமிகளின் பிரபந்தங்களில் தோய்வர்.  முகலாய மன்னனைக் காணச்சென்ற அவர், இந்துஸ்தானி மொழியைப் பயிலவிரும்பிச் சகலகலாவல்லியைத் தோத்தரித்துச் செய்த சகலகலாவல்லி மாலையில் “வடநூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று காக்குங் கருணைக்கடலே சகல கலாவல்லியே” எனப் பாடினார்.
இதில் அம்மையின் தொண்டர்கள் இருமொழியும் வல்லவராக இருப்பர் என்னும் அவரது கருத்துத் தெளிவாகின்றது. தமிழ் இலக்கியம் பயில விரும்புவோர் நாள்தோறும் பாராயணம்செய்யும் நூல் சகலகலாவல்லிமாலை. தமிழறிவுடன் வடமொழியறிவும் இந்நூற் பாராயணம்செய்யும் தமிழ் ஆர்வலர் பெறுவர்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில், இவர், வேதங்களாகிய வடநூல்களை, ‘காலத்தொடு கற்பனை கடந்த கருவூலப் பழம்பாடல்’ எனப் போற்றியதுடன், கலைமாச்செல்வர்கள் அந்தக் கருவூலத்தில் தேடிவைத்துள்ள கடவுள்மாமணி என அம்மையைப் போற்றுகின்றார். (அருமையாகத் தேடிப்பெற்ற நவமணிகளைக் கருவூலத்தில்வைத்துக் காப்பாற்றுதல் நம் வழக்கமல்லவா). மேலும் சங்கம்வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையை, “வடகலை தென்கலை பலகலை யும்பொதி மதுரைவளம்பதியே” எனப் பாராட்டுகின்றார். (மதுரைக் கலம்பகம்)       .
வடமொழியொன்றை மட்டுமே அறிந்தவரைக் காட்டிலும், தமிழ், வடமொழி இருமொழிகளிலும் வல்லவரே போற்றற்குரியவர். அண்மைக்காலத்தில் வாழ்ந்த சைவசித்தாந்தப் பேராசிரியர்களான ஔவை துரைசாமிப் பிள்ளை, பண்டித பூஷணம் பேட்டை ஈசுவரமூர்த்தியா பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், தூத்துக்குடி பொ. முத்தையாபிள்ளை,, சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் ஆ. ஷண்முக முதலியார், பேராசிரியர் திருஞானசம்பந்தம் காஞ்சிபுரம் நாகலிங்க முதலியார், அருணைவடிவேல் முதலியார் முதலியோர் இருமொழிகளிலும் வல்லுநர்களாகத் தமிழ் சைவசித்தாந்தத்திற்கு ஆற்றிய தொண்டினைச் சைவ உலகம் மறத்தலாகாது.
சகலாகம பண்டிதராகிய அருணந்தி சிவாச்சாரியார், காசுமீரம்வரை சென்று சைவசித்தாந்திகளுடனும் பிற மதத்தாருடனும் விவாதம் செய்தார் எனக் கூறப்படுகின்றது. அங்கெல்லாம் அவர் சமஸ்கிருதத்தில்தானே விவாதித்திருப்பார்? தென்னாட்டுச் சுத்தாத்துவித சைவசித்தாந்தம் தமிழ்நாட்டுக்குள் அடங்கிக் குறுகிவிடலாகாது. அது, பிற கேவலாத்துவிதம், விசிட்டாத்துவிதம், துவிதாத்துவிதம் ஆகியவற்றுடன் விவாதிக்கப்பட வேண்டுமாயின் சைவசித்தாந்திகள் தமிழ், வடமொழி இரண்டிலும் புலமைபெற்றே ஆகவேண்டும்.

No comments:

Post a Comment