வாசியாக நின்று சிவனாடும் சண்ட தாண்டவம்.
என் மூக்குத் துவாரங்களில் மூச்சு சொரூபமாய் இருந்து நடனம் செய்து வரும் உன்னை அறியாமல் பல பிறவிகளாய் உயிரை இழந்து வருகிறேன் பூரணமே. இடது நாசியும், வலது நாசியும் இரண்டாகப் பிரிந்து மூக்குத் துவாரங்களுக்கு முடிவாகிய புருவ மத்தியில் மறுபடியும் ஒன்றாகச் சேர்ந்து நடத்துகின்ற மூச்சு எனும் நடனத்தை, காலைத் தூக்கி சித்திரப் பதுமை போல நிறுத்த வழியறியேன் பூரணமே. இதிலே கால் என்று குறிப்பிடுவது காற்றை. சித்திரப் பதுமை என்று குறிப்பிடுவது நடராஜரின் உருவத்தை.
என்னை அறியாமல் எனக்குள்ளே நீயிருக்க
உன்னை யறியாமல் உயிரிழந்தேன் பூரணமே
சக்திசிவம் இரண்டாகி தான்முடிவி லொன்றாகி
சங்குரெண்டு தாரையொன்று
ஜன்னல்பின்ன லாகையால்
மங்கி மாறாதே யுலகில்
மானிடர்க ளெத்தனை
சங்கு ரெண்டையும் தவிர்த்து
தாரைபூத வல்லிரேல்
கொங்கைமங்கை பங்கரோடு
கூடிவாழ லாகுமே.
வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம்.
நெருப்பைமூட்டி நெய்யைவிட்டு
நித்தம்நித்தம் நீரிலே
விருப்பமோடு நீகுளிக்கும்
வேதவாக்யம் கேளுமின்
நெருப்புநீரும் உம்முளே
நினைத்துகூற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத்
துடர்ந்துகூட லாகுமே.
மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்களானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.
இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.
ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.
குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.
ஒருபாதந் தன்னைத் தூக்கி யொருபாதந் தன்னை மாற்றி
இருபாத மாடுகின்ற வியல்பைநீ யறிந்தா யானால்
குருபாத மென்று கூறுங் குறிப்புனக் குள்ளே யாச்சு
விருபாத னாகை நாதர் மலரடி காண்பாய் நெஞ்சே.
இறந்திடு மிருபத் தோரா யிரத் தறுநூறு பேறும்
இறந்திடு மிக்காயம் போனா லீசனைக் காண்ப தென்னாள்
மறந்திடா தறிவான் மூல வாசியை மேலே யேற்றிச்
சிறந்த தற்பரத்து நாகை லிங்கரைத் தரிசி நெஞ்சே.
- நெஞ்சறி விளக்கம்.
இருபத்தோராயிரத்தறநூறு பேரும் என்பது நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே.